
பொதுவாக, மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், பவளமல்லி இதற்கு விதிவிலக்கு. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவழமல்லி பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்குப் பயன்படுத்துவார்கள். பவளமல்லி மரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும் வலது பக்கத்தில் பிரம்மாவும் இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் அந்த இளவரசியை ஏற்கவில்லை. அதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்து பாரிஜாதம் என்ற செடி உருவானது. சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இந்தச் செடி பகலில் சூரியனைப் பார்த்து பூப்பதை தவிர்த்து, இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. தன்னைக் கைவிட்ட சூரியனை பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இது இரவில் பூக்களை சொரிகிறது. பாரிஜாதம் என்ற பவளமல்லி திருமாலுக்கு மிகவும் உகந்தது. பவளமல்லி விருட்சத்தின் வேரில் ஆஞ்சனேயர் குடியிருப்பதாக நம்பிக்கை.
தேவலோகத்தில் இருந்த பாரிஜாதம் மலர் வேண்டும் என்று சத்தியபாமா, கிருஷ்ண பகவானிடம் கேட்க, ஸ்ரீ கிருஷ்ணர் பவளமல்லி மரத்தை கொண்டு வந்து சத்தியபாமா வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால், இம்மரம் வளர்ந்து ருக்மணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாறையூர் சித்தநாதீஸ்வரர், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தல விருட்சமாகக் காணப்படுகிறது.
திருக்களரில் இறைவன் பாரிஜாதனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவருக்கு களர்முலை நாதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவியை இளம் கொம்பன்னாள் அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்தத் தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருபத்தியொரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் வழியில் உள்ளது.
தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர், தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இந்தத் தலத்தின் மகிமையை உணர்ந்த அவர், தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டு வந்து வளர்த்து வந்தார்.
அந்த செடியால், நாளடைவில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் தர வரலாறு தெரிவிக்கிறது. இத்தல இறைவனை வழிபடும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவளமல்லி தல விருட்சமாக வணங்கப்படுகிறது. இந்தத் தலத்தில் குழந்தை இல்லாதவரின் தோஷம் நீக்கும். புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பவளமல்லி மரம் வீசும் காற்று நம் உடலில் பட்டாலே ஆரோக்கியமும் உடல் நலமும் சிறக்கும். அதோடு, இறைவன் அருளும் நமக்குக் கிடைத்து மகிழ்சியான வாழ்க்கை கிடைக்கும்.