சனி பகவான் தாக்கத்தைக் குறைக்கும் அற்புத சிவாலயம்!

Sri Neelakandeswarar - Arulmigu Mangalanayagi
Sri Neelakandeswarar - Arulmigu Mangalanayagi
Published on

நாகை மாவட்டம், மணல்மேடு அருகே இலுப்பைப்பட்டு எனும் தலத்தில் அமைந்துள்ளது மங்களநாயகி சமேத ஸ்ரீ நீலகண்டேசுவரர் திருக்கோயில். ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்ட சிறப்பைப் பெற்றது இக்கோயில். இது தேவார திருத்தலங்களில் ஒன்றாகும்.

சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தனது கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், வனவாசத்தின்போது பஞ்சபாண்டவர்கள் இத்தல ஈசனை தரிசனம் செய்ததுமான சிறப்புகளைப் பெற்றது இந்த ஆலயம்.

அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைக் கண்ட இரு தரப்பினரும் அஞ்சி பின்வாங்கியதுடன் தங்கள் முயற்சியையும் கைவிட முனைந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்க விரும்பிய சிவபெருமான், அந்த விஷத்தை தானே பருகினார்.

இதையும் படியுங்கள்:
விருப்பம், செயல், ஞானம் - அருளும் தெய்வங்கள்
Sri Neelakandeswarar - Arulmigu Mangalanayagi

இதனால் பதறிப்போன உமையம்மை சிவனாரின் கழுத்தை தனது கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்தார். விஷத்தைத் தாங்கிய அவரது கழுத்துப் பகுதி நீல நிறமாக இருந்தமையால், ஈசனுக்கு, ‘நீலகண்டன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

இரண்டு விநாயகர் சன்னிதிகள், ஐந்து சுவாமி சன்னிதிகள், இரண்டு அம்பாள் சன்னிதிகள், மூன்று தீர்த்தங்களைக் கொண்டது இக்கோவில். ஈசனுக்கு நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர், மகதீசுவரர், பரமேசுவரர், முத்தீசுவரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன.

அம்பாளுக்கு அமுதகரவள்ளி மற்றும் மங்களநாயகி எனும் பெயரில் சன்னிதிகள் காணப்படுகின்றன. தல விருட்சம் தெய்வவிருப்பை எனப்படும் இலுப்பை மரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் மற்றும் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆகியவையாகும்.

இத்தல இறைவனை இந்திரன், சனி பகவான், பாண்டவர்கள், உரோமச முனிவர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள் சிவ பூஜை செய்ய விரும்பி சிவலிங்கத்தைத் தேடினர்.

இதையும் படியுங்கள்:
கோதை நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல்கள் எதைப் பற்றியது தெரியுமா?
Sri Neelakandeswarar - Arulmigu Mangalanayagi

எங்கு தேடியும் கிடைக்காமல் போக உரோமச முனிவரின் வழிகாட்டலில் ஒரு இலுப்பை மரத்தின் கீழ் அமர்ந்து, இலுப்பைக் காயில் விளக்கேற்றி தங்கள் சிரமத்தை குறைத்தருளும்படி வழிபட்டு வந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்க, பாண்டவர்கள் ஐந்து பேருக்கு இறைவன் தனித்தனியாக காட்சி தந்தார்.

பிராகாரத்தில் இருந்து ஐந்து அடி உயரத்தில் ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான படிகள் வழியே செல்ல நேரெதிரில் தருமனால் பூஜிக்கப்பட்டவரும், ஆலகால விஷத்தை உண்டவருமான நீலகண்டேசுவரர் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் ஆலயக் கிணறு அமைந்துள்ளது.

அதனையொட்டி சகாதேவன் பூஜித்த முக்தீசுவரர் சன்னிதி தென்முகமாக உள்ளது. சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரை வழிபட்டால் நலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல ஈசனை வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும், பணியில் சிறப்பிடம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com