வறுமையை ஒழிக்கும் குசேலர் தின வழிபாடு தெரியுமா?

Do you know the Kuselar Day worship to eradicate poverty?
Do you know the Kuselar Day worship to eradicate poverty?https://vedicfeed.com
Published on

ம் பாரத தேசத்தில் கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில். இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் அறியப்படும் திருத்தலமாகும் இது.

இந்தக் கோயிலில் அநேக விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், வருடத்தில் மார்கழி மாதத்தில் முதல் புதன் கிழமை நடைபெறும் நிகழ்வாக குசேலர், ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவல் கொடுத்த தினம் மிகவும் விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. இதற்கு புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் பாலகர்களாக இருக்கும்போது சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலவாச முறையில் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அவர்களுடன் சுதாமர் (குசேலர்) என்னும் பாலகரும் பயின்றார். கிருஷ்ணரும் பலராமரும் அவதார புருஷர்களாக இருந்தும் அவர்கள் உலகத்தாருக்கு வழிகாட்டும் நடைமுறையை பின்பற்றியே குருகுலவாசமாக ஒரு குருவிடம் கல்வி பயின்றார்கள். ஒரு நாள் கிருஷ்ணரும் பலராமரும் குருவின் வீட்டில் அடுப்பிற்கு விறகு கொண்டு வருவதற்காக காட்டிற்கு சென்றார்கள். சற்று நேரத்தில் சுதாமரிடம் அவர்கள் மூவருக்கும் சாப்பிட சிற்றுண்டியாக கடலைப்பருப்பை வறுத்து சாந்தீபினி முனிவரின் மனைவி கொடுத்து அனுப்பினாள்.

சுதாமரும் அங்கே அவர்களை சந்தித்தார். தன்னிடம் மூவருக்கும் சிற்றுண்டி இருக்கும் விஷயத்தை சுதாமர் அவர்களிடம் சொல்லவில்லை. கிருஷ்ணர் விறகு வெட்டியதில் களைப்புற்று சுதாமரின் மடியில் சற்றே ஓய்வாகப் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கண் அசந்தும் விட்டார். அப்போது, 'கரக் முரக்'கென்று ஏதோ சத்தம் கேட்டது. சுதாமர்தான் அவர்கள் மூவருக்குமான சிற்றுண்டியை தானே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன சாப்பிடுகிறாய்? என்ன சத்தம்?" என்று கிருஷ்ணர் கேட்டதும் சுதாமர், "சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? குளிரில் என் பற்கள் தாளம் அடித்துக் கொண்டிருக்கின்றன" என்றார்.

இதைக் கேட்ட சர்வ வியாபியான கிருஷ்ணர், "ஓஹோ!  மற்றவர்களது பொருளை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன். நீ எதையும் எனக்குத் தராமல் உண்ண மாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆயினும் கனவு கண்டதால் கேட்டேன்" என்றார்.

இதையும் படியுங்கள்:
சொர்க்கவாசல் உருவான கதை தெரியுமா?
Do you know the Kuselar Day worship to eradicate poverty?

கிருஷ்ணருக்குத் தராமல் தானே உணவை உண்டதாலும் கிருஷ்ணரிடம் உண்மையை மறைத்ததாலும் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும் குசேலர் என்று அழைக்கப்பட்ட சுதாமர் அஷ்ட தரித்திரத்தில் உழல வேண்டியதாயிற்று. அவருக்கு 27 குழந்தைகள். ஒரு நாள் தனது மனைவி சுசீலையிடம், 'தனது பால்ய நண்பர்தான் இப்போது துவாரகையில் அரசராக இருக்கும் கிருஷ்ணர்’ என்று சொன்னதும் அவள், "நாம் இப்படி கஷ்டப்படுகிறோமே? நீங்கள் ஏன் அவரிடம் சென்று உதவி கேட்கக்கூடாது" என்கிறாள்.

அவரும் தனது சொந்த உழைப்பில் ஈட்டிய அவலை ஒரு சிறு முடிப்பாக தன் கிழிசல் அங்கவஸ்திரத்தில் முடிந்து கொண்டு துவாரகைக்குப் போகிறார். அரண்மனை சேவகர்கள் அவரின் தோற்றத்தைக் கண்டு அவர் கிருஷ்ணரின் சிநேகிதராக எப்படி இருக்க முடியும் என்று தடுத்து விட, கிருஷ்ணரே வாசலுக்கு ஓடி வந்து குசேலரைக் கட்டித் தழுவி வரவேற்கிறார்.

குசேலருக்கு மிக்க அன்போடு ராஜோபசாரம் செய்து, தன்னுடைய சிம்மாசனத்தில் அவரை உட்கார வைத்து அவருக்குப் பாத பூஜை செய்கிறார். ருக்மணி  அவருக்கு சாமரம் வீசுகிறாள். அங்கு அவருக்கு நடந்த விருந்து உபசாரத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் "எனக்கு என்ன கொண்டு வந்தாய்?" என்று கேட்க, குசேலர் தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணருக்கு மிகுந்த நாணத்துடன்  சமர்ப்பிக்கிறார். அதை கிருஷ்ணர் ஆவலோடு உண்ட அந்த கணத்தில் குசேலரின் வறுமை முற்றிலுமாக நீங்கி, எல்லா செல்வங்களும் அவரிடம் சென்று சேர்ந்தன.

மார்கழி மாதத்தில் முதல் புதன்கிழமை இந்த புராணகால நண்பர்களின் சந்திப்பு  நடந்ததால் வருடா வருடம் மார்கழி மாத முதல் புதன்கிழமை 'குசேலர் தினமாக' குருவாயூரில் அனுசரிக்கப்படுகிறது. இன்று நம் வீடுகளில் குசேலர் கிருஷ்ணருக்கு அளித்தது போல அவலை வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பிரசாதமாக கிருஷ்ண பகவானுக்கு படைத்து வழிபட்டால் நமக்கும் எல்லா வளங்களும் நம்மைத் தேடி வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com