‘திதியை பிடித்தால் விதியை வெல்லலாம்’ என்பது பெரியோர் வாக்கு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். நமது முன்னோர்கள் குறிப்பிட்ட சில வழிபாட்டு முறைகளால் இதனை நாம் அடைய முடியும். அத்தகைய விரதங்களில் ஏகாதசி விரதமும் ஒன்று. ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்.
‘தாய்க்கு சமமான தெய்வம் இல்லை. காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை. கங்கைக்கு இணையான தீர்த்தம் இல்லை. ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை’ என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று இறைவனை வணங்கும் ஜீவாத்மா வைகுண்ட வாசல் வழியாக பரமாத்மாவே சேருகிறது என்பது ஐதீகம். ஏகாதசி திதி என்றால் பதினொன்றாம் நாள் என்று பொருள். இந்த திதிக்கு அதிபதி மகாவிஷ்ணு. இவரை வழிபட உன்னத நிலையை அடையலாம்.
மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி, ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, ‘வைகுண்ட ஏகாதசி’ எனப்படும். இது, ‘மோட்ச ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
படைப்பு கடவுளான பிரம்மா படைப்புக்காலம் முடிந்து ஊழிக்காலம் தொடங்கியதும் மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் ஒடுங்கினார். பிரம்மனின் அடுத்த பகல் தொடங்கியதும் தாமரை இலை, தண்ணீரை பிரம்மன் மேல் தெளிக்க அதில் சில துளிகள் பிரம்மனின் காதுகளில் சென்றன. விழித்த பிரம்மன் முதல் வேலையாக பிராண வாயுவை தூண்ட அப்போது அவரின் இரு காதுகளில் இருந்து தண்ணீர் வெளியே வர, அது மது, கைடபர் என இரண்டு அரக்கர்களாக உருவெடுத்தன. அவர்கள் பிரம்மனிடம் ஒளி வடிவில் இருந்த வேதங்களை திருடி சென்றனர்.
பெருமாள் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து வேதங்களை திரும்ப கொண்டு வந்தார். இந்த இரு அசுரர்களும் தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் துன்புறுத்த தொடங்கினர். தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் முறையிட, இறைவன் மது கைடபருடன் போரிட்டார். அவர்களை அழிக்க முற்பட்டபோது அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, அவர்கள் விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக கூற, மகாவிஷ்ணு தன்னால் இந்த அசுரர்கள் வதம் செய்யப்பட வேண்டும் எனக் கூற அசுரர்கள், "பகவானே தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்து அதன் பிறகு நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்" என வேண்ட, பகவான் அப்படியே ஆகட்டும் என்றார்.
யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்த அவரின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரம பதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினை கேட்டனர். அத்துடன் அசுரர்கள் தாங்கள் பெற்ற இன்பம் அனைவரும் பெற விரும்பி, இந்த நாளை உத்ஸவமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், சொர்க்கவாசல் வழியாக வெளிவரும் பக்தர்களுக்கு மோட்சம் (முக்தி) அருள வேண்டும் என்றும் வேண்டி நின்றனர். இதன் காரணமாகத்தான் வைகுண்ட வாசல் எனும் சொர்க்கவாசல் உருவானது. மது கைடபர்களை அடக்கியதால் மதுசூதனன் என்ற பெயரும் பெருமாளுக்கு வந்தது.
விரதம் இருக்கும் முறை: ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று ஒரு வேளை உணவு மட்டும் உண்டு மறுநாள் ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி, பெருமாள் கோயிலுக்கு சென்று சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனை வணங்குவது சிறப்பு. நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் பால், பழங்கள் எடுத்துக்கொண்டு விஷ்ணு புராணம், சகஸ்ரநாமம், பாராயணங்கள் செய்து அன்றிரவு தூங்காமல் விழித்திருந்து இறைவன் புகழ் பாடி, கோயில் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு இறைவனுக்கு துளசி மாலை சாத்தி, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லிக் கொண்டு இருப்பது நம் மன ஆரோக்கியத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மறுநாள் துவாதசி அன்று கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடிக்கலாம்.
அன்று உணவாக அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி, சுண்டைக்காய் புளி சேர்க்காத மோர்க்குழம்பு செய்து இயன்றவரை அன்னதானம் செய்து பிறகு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பலனாக நாம் சகல செல்வங்களும் பெற்று வாழலாம். இதனால் உடற்பிணி அகலும். முக்தி கிடைக்கும். குறிப்பாக, பித்ரு தோஷம் நீங்கும்.
சகல செல்வங்கள் அருளுவதுடன் வைகுண்ட பதவியும் கிடைக்கும் இந்த ஏகாதசி விரதம் மார்கழி மாதம் ஏழாம் நாள் (23.12.2023) சனிக்கிழமை அன்று வருகிறது.