கோவிலைக் காவல் காக்கும் ‘பாபியா’ - அதிசயக் கதை தெரியுமா?

Ananthapura temple
Ananthapura temple
Published on

கேரளாவில் உள்ள ஒரு கோவிலை முதலை ஒன்று காவலாக இருந்து பாதுகாக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் அந்த முதலை சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்கிறது என்பது மேலும் ஆச்சர்யத்தைக் கூட்டுகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற புனிதஸ்தலமாக கருதப்படும் அனந்தபுரா கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் குளத்திற்கு நடுவே அழகாக அமைந்திருக்கிறது. பச்சை பசேல் என்று இருக்கும் இந்தக் கோவில் குளத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இந்த முதலையை பக்தர்கள் ‘பாபியா’ என்று பெயரிட்டு அன்போடு அழைக்கிறார்கள்.

இந்த முதலை கோவிலின் காவலாக கருதப்படுகிறது. இந்த முதலை இறந்தால் அந்த இடத்திற்கு வேறு ஒரு முதலை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக முதலை இனமானது அசைவ வகையை சார்ந்தது. ஆனால், இந்த முதலை குளத்தில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடாது என்று சொல்லப்படுகிறது. இந்த முதலைக்கு அந்த கோவில் குருக்கள் சாதம், வெல்லம் ஆகியவற்றை உருண்டையாக்கி உச்சிக்கால பூஜையின் போது வழங்குகிறார். இக்கோவில் குளத்தில் குளிக்கும் பக்தர்களை இதுவரை பாபியா தாக்கியதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘கருட தரிசனம் கோடி புண்ணியம்’ ஏன் தெரியுமா?
Ananthapura temple

சரியாக பிரசாதம் தரும் நேரத்தில் இந்த முதலை குளத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிடும். அமைதியாக குருக்கள் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடும். சில வருடங்களுக்கு முன்பு தான் பாபியா முதலை இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முதலை இறந்துவிட்டால், இக்குளத்தில் மறுதினமே இன்னொரு முதலை தென்படும். இந்த குளத்துக்கு அருகில் ஆறோ, குளமோ இல்லாத போது எப்படி இந்த குளத்திற்குள் முதலை வந்தது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
உணவு அருந்துவதற்கு முன் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் காரணம் தெரியுமா?
Ananthapura temple

இக்கோவில் குளத்திற்கு நடுவே அமைந்திருக்கிறது. இந்த குளம் வற்றாது இருப்பதே அதனுடைய சிறப்பம்சமாகும். இக்கோவில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் உள்ள விஷ்ணு பகவானின் சிலை 70 வகையான மருந்துப் பொருட்களைக் கொண்டு உருவாக்கியது என்று சொல்லப்படுகிறது. பிறகு 1972 ல் பஞ்சலோக சிலையாக மாற்றியமைக்கப்பட்டது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோவிலை ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com