
இன்றைக்கும் திருமணம், விருந்து போன்ற சுபநிகழ்ச்சிக்கு சென்றால் அங்கே உணவுகளை வாழை இலையில் பரிமாறுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். வாழை இலையில் உணவு அருந்துவது என்பது தமிழர்களின் தொன்றுதொட்ட பழக்கமாக உள்ளது. அவ்வாறு வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு முன் அதில் தண்ணீர் தெளிக்கும் வழக்கம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
வாழை இலையில் இயற்கையாகவே பூச்சிகள், தூசி, அழுக்கு நுண்ணுயிர்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆகவே வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் மூலம் பூச்சிகளும், நுண்ணுயிர்களும் அகற்றப்பட்டு உணவு பாதுகாப்பாக இருக்கும்.
மேலும் தண்ணீர் தெளிப்பதன் காரணமாக இலை உறுதியாக இருக்கும். உணவு உண்ணும் வேளையில் இலை கிழிந்து போவது போன்ற பிரச்னைகள் ஏற்படாது. வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதை புனிதமான செயலாக நம் முன்னோர்கள் கருதினர். தெய்வீக சக்தியால் ஆசிர்வதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. தண்ணீர் தெளிப்பதன் மூலமாக நமக்கு உணவு வழங்கிய தெய்வத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அர்த்தம்.
வாழை இலையில் உணவு அருந்திய பின்னர் அதை உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம், உணவு தயாரித்தவருக்கும், அதை பரிமாறியவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக கருதப்படுகிறது. வாழையிலையை பயன்படுத்துவது நம் முன்னோர்களிடமிருந்து நமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தற்போது உள்ள நவீன உலகத்தில் உணவுகளை பரிமாற பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் போன்ற பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். ஆனால், வாழை இலை போன்ற இயற்கையான பொருளை பயன்படுத்துவதால் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.
வாழை இலையில் சூடாக உணவை வைத்து உண்ணும் போது அதில் இருக்கும் குளோரோபில் நம் உணவுடன் கலந்துவிடும். இது உணவு செரிப்பதற்கு உதவுவதோடு மட்டுமில்லாமல் வயிற்றுப்புண்ணையும் ஆற்றும். வாழை இலையில் உணவு உண்ணும் போது அது நம் பசியை மேலும் தூண்டும். வாழை இலையில் உணவு அருந்தும் போது உடல் சம்மந்தமான பிரச்னைகள் வருவதில்லை. இதனால் நோய் இன்றி வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.
உங்களுக்கும் வாழை இலையில் உணவு அருந்த பிடிக்குமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.