மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் தெப்பக்குளம் மாரியம்மன்தான். மதுரையில் எந்த பெரிய கோயிலில் விழாக்கள் தொடங்கும் முன்பும் முதலில் இவளுக்கு பூஜை செய்த பிறகுதான் தொடங்குகிறார்கள். அம்மனுக்கு அபிஷேகம் செய்த நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இந்த அபிஷேக நீர் அம்மை நோய்க்கும், சரும வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது என மக்கள் நம்புகின்றனர்.
ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பூச்சொரிதல் விழாவும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவமும், பூச்சொரிதல் விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான இக்கோவில் அம்மன் சுயம்புவாய் தோன்றியவள். வண்டியூர் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இங்குள்ள அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கியபடி உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறாள். அன்னையின் காலடியில் மகிஷனின் தலை உள்ளது. கையில் பாசம், அங்குசம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அரச மரத்தடியில் விநாயகரும், பேச்சியம்மனும் காணப்படுகிறார்கள். அதைத்தவிர வேறு பரிவார தெய்வங்கள் ஏதுமில்லை.
கூன் பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மகிழ மரக் காடாக இருந்த இந்த இடத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தனர். மக்களைக் காப்பாற்ற படையுடன் சென்ற மன்னர் குறும்பர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி அடித்து சுயம்புவாய் கிடைத்த இந்த அம்மனை கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். ஒவ்வொரு முறை போருக்குச் செல்லும் முன்பும் இவளை வழிபட்ட பிறகுதான் போருக்குச் செல்லும் பழக்கம் கொண்டிருந்தார். அதனால் பல வெற்றிகளை அடைந்தார். இவரை அடுத்து வந்த மன்னர்களும் இந்த மாரியம்மனை வழிபட்டுதான் போருக்குச் சென்றனர்.
வண்டியூர் தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் விநாயகர் கோயில் அருமையான தோட்டத்துடன் அமைந்துள்ளது. திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்கு வேண்டிய மணலை இங்குதான் தோண்டி எடுத்தார்.
அதனால் பள்ளமாக இருந்த அந்தப் பகுதியை சீரமைக்க எண்ணி மன்னர் திருமலை நாயக்கர் அதனை தெப்பக்குளமாக மாற்றி நடுவில் வசந்த மண்டபம் ஒன்றும் அமைத்தார். இந்தக் குளத்தை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட பிள்ளையாரே மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணிப் பிள்ளையாராக அழகுற வீற்றிருக்கிறார்.