பெருமாள் கண் திறக்கும் திருக்கார்த்திகை மாதம்!

Sholingur Narasimhar
Sholingur Narasimhar
Published on

கார்த்திகை மாதம் ‘திருமண மாதம்’ என்ற சிறப்புப் பெற்றது. இம்மாதத்தில் விருட்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால்தான் திருமணம் செய்வதற்கு உகந்த மாதமென்று புகழப்படுகின்றது. பல சுபகாரியங்களும், பண்டிகைகளும் கார்த்திகை மாதத்தில் அதிகளவு கொண்டாடப்படுகின்றன.

கார்த்திகை மாதம் ஆன்மிகச் சிறப்புகள் நிறைந்த மாதம். கார்த்திகையில்தான் ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். சிவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் இது. இந்த மாதத்தில்தான் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். இந்த சங்காபிஷேகத்திற்கும் மற்ற அபிஷேகங்களுக்கும் உரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகள் அனைத்திலும் நடைபெறும் சிவ வழிபாடு சிறப்புப் பெற்றது. சோமவார விரதம் இருப்பது சிவபெருமானின் அருளை முழுவதுமாகப் பெற்றுத் தரும்.

தீபத் திருநாளான திருக்கார்த்திகை திருவிழா கார்த்திகையில் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய் சிவபெருமான் காட்சி அளித்த மாதம் கார்த்திகையாகும். திருவண்ணாமலையை கார்த்திகை பௌர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமானை வழிபடவும் கார்த்திகை மிகவும் ஏற்ற மாதம். முருகப்பெருமானை நினைத்து, கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இந்தத் திருநாள் வழிபாட்டுக்குரியதாகிறது. இந்நாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்:
கந்த சஷ்டியில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் பிறப்பு பற்றி தெரியுமா?
Sholingur Narasimhar

கார்த்திகை மாத துவாதசி நாளில், மகாவிஷ்ணு துளசி தேவியை திருமணம் செய்துகொண்டார் என்பது ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசியால் மகாவிஷ்ணுவை பூஜை செய்து வழிபட்டால் நிறைவான வாழ்வை தருவார். சோளிங்கர் நரசிம்மப் பெருமான் கண் திறக்கும் மாதம் கார்த்திகை. அந்த மாதத்தில் நரசிம்மரை வழிபாடு செய்தால் சகல தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னியில் எழுந்தருளி, கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

கார்த்திகை மாத, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் ஞாயிறு விரதத்தை கடைப்பிடித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் அருள் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் அனைத்து மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com