முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு என, திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோயிலையே பக்தர்கள் அழைக்கின்றனர். நக்கீரரும், அருணகிரிநாதரும் இம்முருகனை குறித்து பாடல்களை பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
‘திரு’ என்றால் லக்ஷ்மி, ‘ஆ’ என்றால் காமதேனு, ‘இனன்’ என்றால் சூரிய பகவான், பூமாதேவி, அக்னி ஆகிய ஐவரும் இத்தலத்து முருகனை வழிபட்டமையால், ‘திரு ஆவினன்குடி’ எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மாம்பழத்திற்காக கோபம் கொண்டு இங்கு வந்தமர்ந்த முருகனை சிவனும் பார்வதியும், ‘ஞான பழம் நீ’ என்று முருகனுக்கு சூட்டிய பெயரே நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வரக் காரணமானதாக தல புராணம் கூறுகிறது.
திரு ஆவினன்குடி கோயிலில் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சரவண பொய்கையில் இன்றும் மக்கள் நீராடி இறைவனை தரிசிக்க முடிகிறது. திருவாவினன்குடி கோயிலையே நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகனின் மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகிறார்.
பங்குனி உத்திரம் திருக்கல்யாணம், தேர் திருவிழா போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக இக்கோவிலில் நடைபெறுகின்றன. அருணகிரிநாதர் திருவாவினன்குடி பெருமானைப் பற்றி பன்னிரண்டு திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். அவருக்கு இக்கோயிலில் தனிச் சன்னதி உள்ளது.
இக்கோயில் தலவிருட்சம் நெல்லி மரம். இங்கு முருகப் பெருமான் பாலசுப்பிரமணியராக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். பெரிய பிராகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் ஆறு கால பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.