புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயில், அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம் ஆகும். இவ்வாலயத்தில் சனி பகவான் தனிச்சன்னிதி ஒன்றில் அருள்பாலிக்கிறார். திருநள்ளாறு சனி பகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது.
அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வழியே வந்துகொண்டிருந்தார். அதேசமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனி தோஷம் நீங்க திருநள்ளாறுக்கு இந்த வழியே சென்று கொண்டிருந்தபோது இவர்கள் இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடும்படி மன்னனிடம் சொன்னார்.
இக்கோயிலில் நவக்கிரகங்களையும் கூடவே பிரதிஷ்டை செய்யுமாறும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் சன்னிதியை அமைக்குமாறும் கூறியதாக வரலாறு. இத்தலம் சனி தோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
தமிழகத்தின் மற்ற ஆலய நவக்கிரக சன்னிதியில் சனி பகவானும் இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் இருப்பர். ஆனால், இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டால் சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குவதாக நம்பிக்கை. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறும் இப்பகுதி மக்களின் அனுபவமாக உள்ளது.