பகவத் கீதையின் நான்காவது அத்தியாயப் பெருமை தெரியுமா?

துறவியின் தியானம்
துறவியின் தியானம்https://yssofindia.org
Published on

ங்கை நதிக்கரையில் உள்ள புண்ணிய நகரமான காசியில் பரதன் என்ற ஒரு துறவி வாழ்ந்து வந்தார். பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை அவர் எப்போதும் பாராயணம் செய்துகொண்டே இருப்பார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் பல ஊர்களில் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து கொண்டு வரும்போது அவருக்கு களைப்பு ஏற்பட்டது. சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர், அங்கிருந்த இரண்டு இலந்தை மரங்களின் வேரில் ஒன்றில் தலையையும் மற்றொன்றில் காலையும் வைத்து படுத்துக்கொண்டே பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை பாராயணம் செய்து கொண்டே உறங்கினார். பிறகு கண் விழித்து எழுந்து சென்றுவிட்டார்.

வருடங்கள் கடந்தன. ஒரு சமயம் வேறொரு நகரில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டு பெண்கள் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். “நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்று கேட்டார் பரதன். சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இலந்தை மரங்களாக இருந்தோம். நீங்கள் எங்கள் வேரில் இளைப்பாறினீர்கள். தங்கள் தலையும் பாதமும் பட்டதால் நாங்கள் சாப விமோசனம் பெற்று ஒரு பணக்காரர் வீட்டில் பெண்களாக பிறந்து வளர்ந்து வருகிறோம்” என்று கூறினர்.

அதைக் கேட்டு வியந்துபோன அவர், “சரி நீங்கள் ஏன் இலந்தை மரமானீர்கள்” என்று கேட்டார். “கோதாவரி நதிக்கரையில், ‘விச் சின்ன பாவம்’ என்ற புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. அதன் கரையில் சத்ய தபஸ்யர் என்ற ஒரு மகான் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் பலித்தால் தனது பதவியை இழக்கும் ஆபத்து வரலாம் என்று இந்திரன் நினைத்தான். எனவே, அவரது தவத்தை கலைக்க பல விதங்களில் முயன்றான். முடியாமல் போகவே, கடைசியாக தேவ கன்னிகளான எங்களை அனுப்பி அவர் தவத்தை கலைத்து விடும்படி கூறினான்.

இதையும் படியுங்கள்:
ஒரெகானோவிலிருக்கும் உன்னத நன்மைகள்!
துறவியின் தியானம்

நாங்களும் அவரது தவத்தை கலைக்கப் பார்த்தோம். முடியவில்லை. எங்களது செய்கையால் கண் விழித்த முனிவர் நீங்கள் இருவரும் கங்கை நதிக்கரையில் இலந்தை மரங்களாக இருக்கக் கடவது” என்று சபித்தார். பயந்துபோன நாங்கள் அவரிடம், “நாங்கள் இந்திரனின் அடிமைகள். அவன் சொன்னதை செய்ய கடமைப்பட்டவர்கள். எனவே, எங்களை மன்னித்து சாப விமோசனம் அளியுங்கள்” என்று வேண்டிக்கொண்டோம்.

அதற்கு அவர், “பரதன் என்ற மகான் ஒருவர் வந்து இலந்தை மரங்களாக இருக்கும் உங்கள் நிழலில் படுத்து பகவத் கீதையின் நான்காவது அத்தியாயத்தை பாராயணம் செய்து கொண்டே இளைப்பாறி விட்டுப் போவார். அதைக் கேட்ட நீங்கள் இருவரும் சில நாட்களில் சாப விமோசனம் பெற்று நகரத்தில் உள்ள ஒரு பணக்காரர் வீட்டில் பெண்களாகப் பிறப்பீர்கள். அதன் முடிவில் தேவலோகத்தை அடைவீர்கள் என்றார். அதன்படி தங்களை நாங்கள் தரிசித்து விட்டோம். எங்களின் சாப விமோசன காலம் வந்துவிட்டது. எங்களை ஆசீர்வதியுங்கள்” என்று கூறி வணங்கினர்.

அந்தப் பெண்களுக்கு ஆசி வழங்கிய பரதர், ‘கீதையின் நான்காவது அத்தியாயத்துக்கு இவ்வளவு பெருமையா?’ என்று எண்ணி ஆச்சரியப்பட்டார். அன்று முதல் பகவத் கீதையின் பெருமையை அவரே மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com