மேதாவி மகரிஷியின் வேண்டுதல் பிரார்த்தனையை நிறைவேற்ற அவருக்கு மகளாக ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்தார். அவரை மானிட உருவில் வந்து சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் புரிந்துகொண்டார்.
நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி தாயாருக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்த தெய்வத் திருமணத்திற்கு பெரிதும் உதவிபுரிந்த கருடாழ்வாருக்கு சிறப்பு இடம் வழங்கப்பட்டு அவருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. உத்ஸவ தினங்களில் கல் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஸேவை இத்தலத்தைத் தவிர வேறு எங்கும் காணக் கிடைக்காது.
சுவாமி புறப்பாட்டின்போது கல் கருடனை தூக்கிச் செல்ல முதலில் நாலு பேர் மட்டுமே இருப்பர். பின்னர் கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8 ,16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 பேர் வரை அதிகரிக்க நேரிடும். அதேபோல் கோயில் வாசலில் இருந்து 128 நபர்கள் தொடங்கி படிப்படியாக குறைந்து நிறைவாக நாலு பேர் மட்டுமே அவரை சன்னிதியில் அமர்த்துவர்.
இக்கோயிலில் தாயாருக்கே முதல் மரியாதை என்பதால் உத்ஸவ காலங்களில் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி தாயார் முன்னே செல்வார். அதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் பெருமாள் அன்னப்பறவையின் பின்னர் செல்ல வேண்டியுள்ளதால் கருடனின் எடை கூடிக்கொண்டே போகும். அன்னப்பறவையின் மெதுநடைக்கு ஈடுகொடுத்து கருடன் வழக்கம் போல் வேகமாக பறந்து செல்லாமல் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது.
இந்தக் கல் கருடனை ஒன்பது நாகங்கள், ஆபரணங்களாக அலங்கரிக்கின்றன. கல் கருடனின் சிறப்பு காரணமாக, இங்கு நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. பங்குனி மற்றும் மார்கழி மாதம் என இரு முறை மட்டும் வெளியே வரும் இந்த கல் கருட பகவான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாச்சியார்கோவில் கல் கருட பகவானை ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நினைத்து அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.