பெருமாளின் தாடையில் உள்ள வெண்மை நிறத்தின் காரணம் தெரியுமா?

perumal
perumal

ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சிஷ்யர்களில் மிகச்சிறந்தவராய்த் திகழ்ந்தவர் அனந்தாழ்வான். திருமலை திருப்பதியில் நந்தவனம் ஒன்றை அமைத்து அதில் பூத்துக் குலுங்கும் மலர்களால் வேங்கடவனை அலங்கரிக்க விரும்பினார் இராமானுஜர். நந்தவனத்தை அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்ய ஒருவரை திருமலைக்கு அனுப்ப விரும்பினார்.

ஒரு நாள் இராமானுஜர் திருமால் அடியவர்களுக்கு நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைச் சொல்லி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே கூடியிருந்த அடியவர்களிடம், “திருமலையில் நந்தவனம் அமைத்து வேங்கடவனுக்கு அனுதினமும் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பணியைச் செய்ய யாராவது முன்வருகிறீர்களா ?” என்று கேட்டார். யாரும் முன்வரவில்லை. அப்போது அக்கூட்டத்திலிருந்த அனந்தாழ்வான் எனும் சிஷ்யர் “தாங்கள் அனுமதி அளித்தால் இன்றே திருமலைக்கு என் மனைவியோடு சென்று நந்தவனம் அமைத்து வேங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்கிறேன்” என்றார். இராமானுஜரும் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

கர்ப்பிணியாக இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்று திருமலை அடிவாரத்தில் நின்று குருவின் நாமத்தை உச்சரித்து நிலத்தில் விழுந்து வேங்கடவனை வணங்கி நமஸ்கரித்து மிகவும் கடினமான மலைப்பாதையில் நடந்து திருமலையை அடைந்தார்.

அனந்தாழ்வான் திருவேங்கடமலையில் ஒரு கடப்பாறையைக் கொண்டு நந்தவனம் அமைக்கும் தனது பணியைத் தொடங்கினார். கடப்பாறை மூலம் அவர் நிலத்தைத் தோண்டி கூடையில் மண்னை அள்ளித் தர, அதைத் தனது தலையில் சுமந்து சென்று வேறொரு இடத்தில் கொட்டிவிட்டு வந்தார் அவருடைய கர்ப்பிணி மனைவி. கர்ப்பவதியாய் இருந்த காரணத்தினால் அவள் மிகவும் சிரமத்துடன் அப்பணியைச் செய்தாள். அவள் படும் சிரமத்தைப் பார்த்த வேங்கடவனின் மனம் கருணையால் நனைந்து நெகிழ்ந்தது.

இருவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாகத் தோன்றி அனந்தாழ்வானிடம் பேச்சுக் கொடுத்தார் வேங்கடவன். “அய்யா, கர்ப்பிணியான தங்கள் மனைவி மண்ணைச் சுமந்து சென்று கொட்டிவிட்டு வருவது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தாங்கள் எனக்கு அப்பணியைத் தாருங்கள். நான் மண் கூடையைச் சுமந்து சென்று கொட்டிவிட்டு வருகிறேன்” என்றான் அந்த சிறுவன்.

ஆதிசேஷனின் அம்சமான அனந்தாழ்வானுக்கு இதைக் கேட்டதும் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. “என் குருவான ஸ்ரீஇராமானுஜர் எனக்கிட்ட பணியை நான் மட்டுமே செய்வேன். எங்கள் வேலையில் குறுக்கிட்டு தொந்தரவு செய்யாதே. உடனே புறப்பட்டுச் செல்” என்று கோபத்துடன் கூறினார்.

அனந்தாழ்வான் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை உணர்ந்த அந்தச் சிறுவனோ, அனந்தாழ்வானின் மனைவியிடம் சென்று தான் அவருக்கு உதவுவதாய்க் கூற, முதலில் மறுத்தவர் பின்னர் சம்மதித்தார். அனந்தாழ்வான் கூடையில் மண்ணை நிரப்பித் தர, அதைச் சிறிது தொலைவு எடுத்துச் சென்ற மனைவி அங்கு மறைவாகக் காத்திருந்த அச்சிறுவனிடம் கூடையைக் கொடுத்தாள். அச்சிறுவன் சிறிது தொலைவு சென்று அம்மண்ணைக் கொட்டிவிட்டு வந்து கூடையை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

மண் சுமக்க முடியாமல் சிரமப்பட்ட தனது மனைவி இப்போது சென்ற மாத்திரத்திலேயே மண்ணைக் கொட்டிவிட்டுத் திரும்பி வருவதைக் கண்ட அனந்தாழ்வான், அவளிடம் இதுபற்றி விசாரித்தார். மனைவியும் ஒருகட்டத்தில் வேறு வழியின்றி சிறுவன் ஒருவன் தனக்கு உதவுவதாய்க் குறிப்பிட்டாள். இதைக் கேட்டு கோபம் அடைந்த அனந்தாழ்வான், அச்சிறுவன் மீது கோபம் கொண்டு வேகமாய்ச் சென்றார்.

அனந்தாழ்வான் கையில் கடப்பாறையோடு தன்னைத் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்த சிறுவன் வேகமாக ஓடத் தொடங்கி வழியில் இருந்த உறங்காப்புளி மரத்தைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டான். மரத்தடியில் நின்று, “கீழே இறங்கி வா” என்று கோபத்தோடு அழைத்தார் அனந்தாழ்வான். பயமுறுத்தினால் சிறுவன் கீழே இறங்கமாட்டான் என்றெண்ணி, “உன்னை எதுவும் செய்ய மாட்டேன் கீழே இறங்கி வா” என்றதும் அந்தச் சிறுவன் மரத்திலிருந்து குதித்து ஓட்டமெடுத்தான். ஓடியபடியே அனந்தாழ்வான் பின்னால் ஓடி வருகிறாரா என்று திரும்பிப் பார்த்தபோது அனந்தாழ்வான் கோபத்தோடு கடப்பாறையை வீசி எறிந்தார். அந்த கடப்பாறை நேராக சிறுவனின் தாடையைத் தாக்கி, ரத்தம் பெருக்கெடுத்தது. கடப்பாறையைக் கையில் எடுத்துக் கொண்டு சிறுவனைத் தொடர்ந்து ஓடினார். வேகமாக ஓடிய சிறுவன் கோயிலுக்குள் சென்று கருவறைக் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டான். அனந்தாழ்வான் கோபம் குறையாமல் அர்ச்சகர்கள் வந்து ஆலயத்தின் கதவுகளைத் திறக்கும்போது சிறுவனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி ஆலயத்தின் வாயிலில் கடப்பாறையோடு அமர்ந்து கொண்டார்.

அர்ச்சர்கள் பூஜை செய்ய வந்தபோது அங்கு கையில் கடப்பாறையோடும் கோபத்தோடும் அமர்ந்திருக்கும் அனந்தாழ்வானிடம் விசாரித்தார்கள். அவரும் நடந்ததைக் கூறினார். அர்ச்சகர்களும் கதவைத் திறக்க, உள்ளே ஓடிச் சென்று சிறுவனைத் தேடினார். ஆனால், கர்ப்பகிரஹத்திற்குள் வேங்கடவன் தாடையில் ரத்தக்கரையோடு கூடிய காயத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அர்ச்சகர்களும் செய்வதறியாது திகைத்துப் போனார்கள். அனந்தாழ்வான் தான் செய்த தவறை நினைத்து பெருங்குரலில் அழத் தொடங்கினார்.

“பெருமாளே, எனக்கு உதவ வந்த உன்னை காயப்படுத்தி விட்டேனே. பிராயச்சித்தமே இல்லாத பெரும் பாவத்தைச் செய்து விட்டேனே” என்று புலம்பினார். அர்ச்சகர்கள் அனந்தாழ்வானை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அனந்தாழ்வான் சமாதானமடையவில்லை. அப்போது வேங்கடவன் தனது மதுரமான குரலில் பின்வருமாறு கூறினார்...

இதையும் படியுங்கள்:
பெருமாள் கண் திறக்கும் திருக்கார்த்திகை மாதம்!
perumal

“அனந்தாழ்வானே, கவலை வேண்டாம். இது எனது லீலையே. பக்தனுக்கும் பகவானுக்கும் இடையில் உள்ள தொடர்பையும் உறவையும் உன் மூலம் இந்த உலகத்திற்குத் தெரிவிக்க நினைத்தேன். அவ்வளவுதான். நீ உண்டாக்கிய காயத்திற்கு சந்தனம் கலந்த பச்சைக்கற்பூர சூரணத்தைத் தடவுவாயாக. சில நாட்களில் காயம் ஆறிப்போகும். ஆனாலும், பச்சைக் கற்பூரக் களிம்பைத் தடவுவதை நிறுத்த வேண்டாம். தொடர்ந்து பச்சைக் கற்பூரக் களிம்பைத் தடவி வா. இதன் மூலம் என் அழகு இரு மடங்காகும். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் என் முகத்தில் முதலில் திருநாமத்தையும் பின்னர் தாடையில் தடவப்பட்ட வெண்மை நிற பச்சைக் கற்பூரத்தையும் கவனித்து விசாரிப்பார்கள். இதன் மூலம் நம் இருவரின் உறவை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார்.

உடனே அனந்தாழ்வான் பச்சைக் கற்பூர சூரணத்தை சந்தனத்தோடு கலந்து பெருமாளின் தாடைக் காயத்தில் தடவினார்.

ஸ்ரீவேங்கடவனின் தாடையில் காயத்தை ஏற்படுத்திய அனந்தாழ்வான் பயன்படுத்திய கடப்பாறையை ஆலயத்திற்குள் நுழையும்போது மகாதுவாரத்தின் வலதுபுறத்தில் காணலாம். இன்றும் ஆலய அர்ச்சகர்கள் பெருமாளுக்கு பச்சைக்கற்பூரக் களிம்பை தினமும் தடவி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com