
நாம் சிறுவர், சிறுமியராக இருந்தபொழுதும், இன்னும் மற்ற சிறுவர், சிறுமிகள் ஏதாவது விலங்குகளை, பறவைகளை, ஊர்வனவற்றை லேசாக துன்பப்படுத்தினால் கூட அவ்வாறு செய்யக் கூடாது. கடவுள் கண்கொண்டு பார்ப்பார். மற்ற உயிர்களுக்கு துன்பம் அளித்தால் அதற்குத் தகுந்த தண்டனை தருவார். ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். தவறு செய்யாமல் நம்மை காத்துக் கொள்வார்கள். அப்படி ஒருவர் தவறு செய்ததால் ஏற்பட்ட விளைவை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நள்ளிரவில் ஒரு அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த அணிகலன்களைத் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். விழித்த அரண்மனை வீரர்கள் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள். தப்பிக்க நினைத்த திருடர்கள் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தார்கள். வீரர்களும் அவர்களை விடவில்லை.
அங்கே ஓரிடத்தில் மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். தியானத்தில் இருந்த அவர் கழுத்தில் விலை உயர்ந்த முத்து மாலை ஒன்றை போட்டான் ஒரு திருடன். பிறகு அவர்கள் எல்லோரும் அருகில் இருந்த புதர்களில் பதுங்கிக் கொண்டார்கள். திருடர்கள் எல்லோரையும் வீரர்கள் வளைத்துப் பிடித்தார்கள். முனிவரின் கழுத்தில் விலை உயர்ந்த மாலை இருந்ததால் அவரையும் திருடன் என்றே நினைத்தார்கள். திருடர்களுடன் அவரையும் சேர்த்து இழுத்துச் சென்று அரசனின் முன் நிறுத்தினார்கள்.
அரசனும் உண்மையை உணராது எல்லோரையும் கழுவில் ஏற்றிக் கொல்லுமாறு கட்டளை இட்டான். எல்லோரும் கழுவில் ஏற்றப்பட்டனர். திருடர்கள் எல்லோரும் உயிரை விட்டனர். ஆனால், துறவி மட்டும் உயிரோடு இருந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட வீரர்கள், அரசனிடம் ஓடிச் சென்று சொன்னார்கள்.
அதைக்கேட்டு திடுக்கிட்ட அரசன், அங்கு ஓடி வந்தான். தவறுதலாக துறவிக்குத் தண்டனை தந்ததை எண்ணி வருந்தினார். கழுவிலிருந்து துறவியைக் கீழே இறக்குமாறு வீரர்களுக்குக் கட்டளை இட்டான். அவர்களும் அப்படியே செய்தனர்.
வேதனையால் துடித்துக் கொண்டிருந்த துறவியின் கால்களில் விழுந்தான் அரசன். ‘நான் அறியாமல் செய்த பிழையை மன்னித்து என்னை காத்தருள வேண்டும்’ என்று வேண்டினான். அரசனை மன்னித்த அவர், கோபத்துடன் எமனுலகம் சென்றார்.
அங்கு எமனைப் பார்த்து, “எனக்கு இப்படிப்பட்ட துன்பம் வரக் காரணம் என்ன?” என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார்.
"நீங்கள் சிறுவனாக இருந்தபோது தும்பி ஒன்றைப் பிடித்து அதை ஈர்க்குச்சியில் கோர்த்து விளையாடினீர். அந்தத் தும்பி பட்ட துன்பத்தை நீங்களும் பட வேண்டும் என்பது விதி. அதனால்தான் இந்தத் துன்பம் நேர்ந்தது" என்றான் எமன்.
இதைக் கேட்டதும் அவரின் கோபம் எல்லை கடந்தது. "எமனே! பிள்ளைப் பருவத்தில் அறியாமல் செய்யும் பாவத்திற்கு இவ்வளவு கொடிய தண்டனையா? இப்படி விதித்த நீ, இதற்கு உரிய தண்டனையாக பூமியில் மனிதனாகப் பிறந்து அனுபவிப்பாயாக" என்று சாபம் தந்தார். சாபம் பெற்ற எமனே பூமியில் விதுரனாகப் பிறந்தார் என்பது புராணம். ஆதலால், எந்த உயிருக்கும் துன்பம் தராமல் வாழ்ந்து சிறப்படைவோம்!