

குலதெய்வ கோயிலில் வருடா வருடம் பொங்கல் வைத்து விசேஷமாக வழிபாடு செய்து கொண்டாடி வருவதால் குடும்பம் செழிக்கும் என்பது நம் பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. குலதெய்வ வழிபாட்டை நிறுத்தினால் குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் வரும். நம் குலம் தழைக்க குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
இப்படி குலதெய்வ வழிபாட்டைச் செய்யும்போது சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும் என்பது பழக்கத்தில் உள்ளது. குலதெய்வத்துக்கு நாம் ஏன் சர்க்கரைப் பொங்கலை படைக்கிறோம்? வேறு ஏதாவது கூட நைவேத்தியம் செய்யலாமே. குறிப்பாக, சர்க்கரைப் பொங்கலை குலதெய்வத்திற்குப் படைப்பது ஏன்? அது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
நம் ஒவ்வொருவரின் ஜனன ஜாதகத்தின்படி 12 ராசிகள் அமையப் பெற்றுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு விதமான பலனைக் கொடுக்கக்கூடியது. 12 கட்டங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கக் கூடியது பூர்வ புண்ணிய கர்ம பலன்கள். இது ஐந்தாம் இடத்தில் இருப்பதால் இது ரொம்ப முக்கியமானது. புத்திர பாக்கியம், அறிவுத்திறன், கல்வித் திறன் என நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை தீர்மானிப்பது இந்த ஐந்தாம் இடம்தான்.
இந்த ஐந்தாம் இடத்தில் தீர்க்கமாக சம்மணம் போட்டு அமர்ந்திருப்பவர்தான் சனி பகவான். அதே இடத்தில்தான் குலதெய்வம் இருக்கிறது. ஐந்தாம் இடத்திற்குரிய சனி பகவான் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர். இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் நீங்கள் ஏமாற்றி விடலாம். ஆனால், சனி பகவானை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. செய்த பாபத்திற்கும் புண்ணியத்துக்கும் அவர் சரியான கணக்கு போட்டு கொடுத்து விடுகிறார். அப்படிப்பட்ட சனி பகவானுக்கு உரிய ஐந்தாம் இடத்தில் பூர்வ புண்ணிய பலன்கள் அமையப் பெற்றுள்ளதால் நம் கர்ம பலன்களால் உண்டாகக்கூடிய பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்க குலதெய்வத்தின் அருள் இன்றியமையாதது. அவர் அருள் இல்லையென்றால் துன்பங்கள் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும்.
நம் குலதெய்வத்தை நிந்திக்கக் கூடாது. நம் நலன் மீது முழு அக்கறையும் பாதுகாப்பும் கொண்டுள்ள குலதெய்வத்தை வழிபட மறக்கக் கூடாது. அறுசுவையில் ஒவ்வோரு கிரகத்துக்கும் உரிய சுவை ஒன்று உண்டு. அந்த வகையில் சனி பகவானுக்கு உரிய சுவை கசப்பு. கசப்பு எனும் சுவைக்கு எதிராக இருக்கிற இனிப்பு எனும் சுவையை கொண்டுதான் கையாள வேண்டும். அதனால்தான் குலதெய்வத்துக்கு இனிப்பான சர்க்கரைப் பொங்கலை தயார் செய்து படைத்து வருடா வருடம் கர்ம பலன்கள் தீர பிரார்த்தனை சேர்த்து கொண்டு வருகிறோம். நாம் செய்த சாபங்கள் நம்மை மட்டுமல்லாது, நம் குலத்தையும் பாதிக்கும்.
நாம் செய்த பாபம் நமது பிள்ளைகளை பாதிக்கும். இப்படி பிள்ளைகளை பாதிக்கக் கூடாது என்பதால்தான் குலதெய்வத்தின் அருளைப் பெற சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு அவரின் அருளைப் பெற வேண்டும் என்பது நம் முன்னோர்களால் தெய்வீக ரகசியமாகச் சொல்லப்பட்டது.