திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் தெரியுமா?

Thirukkolur Penpillai Ragasiyam
Thirukkolur Penpillai Ragasiyamhttps://www.youtube.com
Published on

வைணவ ஆச்சார்யரான ஸ்ரீ இராமானுஜர் ஜாதி பேதம், பெண், ஆண் பேதம் பாராமல் அனைவரையும் தன்னுடைய சிஷ்யர்கள் ஆக்கி வைணவத்தை வளர்த்த மகான். ஏராளமான பெண்களும் அவருக்கு சிஷ்யைகளாக இருந்து வைணவத்தை வளர்த்துள்ளனர். மகான் ஸ்ரீ ராமானுஜரிடம் திருக்கோளூரைச் சேர்ந்த ஒரு பெண்பிள்ளை கேட்ட என்பத்தியொரு கேள்விகளே, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் திருக்கோளூர். ஒரு சமயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளை சேவிக்க ஸ்ரீ இராமானுஜர் ஆழ்வார்திருநகரியிலிருந்து திருக்கோளூருக்கு எழுந்தருளியபோது, ஒரு பெண்பிள்ளை திருக்கோளூரை விட்டு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். உடனே இராமானுஜர் அந்தப் பெண் பிள்ளையிடம், “இளமான் புகும் ஊர் அதாவது, பெண்கள் புகும் ஊர் என்று போற்றப்படும் இந்த திருக்கோளூரை விட்டு நீ வெளியேறுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார்.

பதிலுக்கு அந்தப் பெண் பிள்ளையோ, “ஞானமற்ற நான் இங்கிருந்தால் என்ன? அல்லது எங்கு சென்றால் என்ன?” என்று சொல்லி வைணவப் பெரியோர்களின் 81 அருஞ்செயல்களைக் கூறி, “இத்தகைய வைணவ நலன்கள் எனக்கு வாய்க்கவில்லையே” என்று கூறி வருந்தினாள். இந்தப் பெண்பிள்ளை கூறிய 81 வார்த்தைகளின் மறைப்பொருளைக் கொண்ட நூல், ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று அழைக்கப்படுகிறது. இது வைணவ ரகசிய கிரந்தங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வெளிப்படையாக, எளிமையான முறையில் அந்தப் பெண் பிள்ளை சொன்ன வார்த்தைகள் ஆயினும் அவை தத்துவார்த்தம் பொருந்தியவையாதலால் ரகசியம் என்று போற்றப்படுகிறது.

ஒரு சாதாரண பெண் பிள்ளை மகான் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த இராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் பொதிந்த 81 கருத்துக்கள்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம். ‘அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே’ எனத் தொடங்கி, ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே” என முடியும் 81 விஷயங்களை எடுத்துரைத்து ‘‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல. அதனால்தான் இவ்வூரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிலுரைத்தாள்.

இதையும் படியுங்கள்:
ஸ்டாயிஸிச தத்துவத்தைப் பயன்படுத்துவதன் 6 பயன்கள்!
Thirukkolur Penpillai Ragasiyam

மேற்காணும் 81 வாக்கியங்களில் அந்தப் பெண் பிள்ளை வைணவத்தின் சாராம்சங்களை முழுமையாக எடுத்துரைக்கிறாள். இவை அனைத்தும் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜருக்கு நன்கு தெரிந்த விஷயங்களாயினும், அப்பெண் பிள்ளை சொல்வதை பொறுமையுடன் கேட்டு மகிழ்ந்தார்.

“நீ இராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் பொதிந்த 81 கருத்துக்களை மேற்கோள் காட்டி உரைத்துள்ளாய். நீ திருக்கோளூரில் இருக்க வேண்டியவளே” எனக் கூறி, அவளை அழைத்துக் கொண்டு வைத்தமாநிதி பெருமாளை கோயிலுக்குச் சென்று சேவித்து, அந்தப் பெண்ணையும் தனது சீடராக்கிக் கொள்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com