மூலவர் வழிபாட்டுக்கு முன்பு காவல் தெய்வத்தை வழிபடும் திருத்தலம் தெரியுமா?

Thiruchendur Murugan Temple
Thiruchendur Murugan Temple

திருச்செந்தூர் என்றுமே நம் நினைவுக்கு வருவது கடல் குளியல், நாழிக்கிணறு, இலை விபூதி பிரசாதம்தான். இவை தவிர இன்னும் பல ஆச்சரியங்களும் திருச்செந்தூர் திருத்தலத்தில் நிறைந்திருக்கின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

அறுபடை வீடுகளில் ஐந்து படை  வீடுகள் மலைப்பகுதிகளிலும், திருச்செந்தூர் கோயில் மட்டுமே கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். முருகனின் அறுபடை வீடுகளில் இது இரண்டாம் படை வீடாகத் திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேவார வைப்புத் தலமாக கருதப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில் இது. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள கோயிலாகும்.

இக்கோயில் செந்தில் ஆண்டவனுக்கு பூஜை செய்வதற்கு முன்பு முதலில் வீரபாகுவுக்கு ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர். இத்தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றே அழைப்பர். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயில், ‘ஓம்’ என்னும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு வாஸ்து லட்சணங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு கடிகார மாளிகை என்பது ஒன்பதாவது மாடத்தில் உள்ளது.

கருவறையின் பின்புறம் 5 லிங்கங்களும், கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இங்கு அஷ்ட லிங்கங்களும் இடம்பெற்றிருக்கக் காரணம் இறைவன் பஞ்ச பூதங்களாகவும், சூரிய சந்திரர்களாகவும், உயிர்களாகவும் விளங்குகின்றார் என்பதை விளக்குவதற்காகவே இப்படி அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பஞ்ச லிங்கங்களுக்கு பூஜைகள் நடைபெறுவதில்லை. காரணம், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

இங்கு நடைபெறும் தாராபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மூலவரின் சிரசிற்கு மேல் பெரிய வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி சிறு துவாரங்களின் வழியாக பால் தாரை தாரையாக மூலவரின் மேல் விழச்செய்து நடைபெறும் தாராபிஷேகம் இக்கோயிலின் சிறப்பாகும். மூலவருக்கான நைவேத்தியங்களில் புளிப்பு, காரம் சேர்ப்பதில்லை. பருப்புக் கஞ்சி, தேன்குழல், அதிரசம், அப்பம், தினை மாவு போன்றவை நைவேத்தியங்களாக இடம்பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நைவேத்தியத்தில் இடம்பெறும்.

இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகிறது. இக்கோயிலில் விபூதி அபிஷேகம் சிறப்பு பெற்றது. அனைவரும் அறிந்த இக்கோயிலின் இலை விபூதி பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேவர்கள் இந்த ஊரில் பன்னீர் மரங்களாக உள்ளதாக ஐதீகம். 12 நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் தரப்படும் விபூதி பிரசாதம் முருகன் தனது பன்னிரு கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யமாக பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. மற்றொரு கருத்துப்படி சூரபதுமன் வதம் முடிந்ததும் முருகப்பெருமான் தனது பரிவாரங்களுக்கு தனது பன்னிரு கரங்களால் விபூதி பிரசாதம் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விழாக்களில் பரிசுப்பொருள் கொடுக்கப்போகிறீர்களா? சற்று யோசிக்கலாமே!
Thiruchendur Murugan Temple

கந்த சஷ்டி திருவிழா பொதுவாக எல்லா கோயில்களிலும் 6 நாட்கள் நடைபெறும். ஆனால், இங்கு 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்றவை இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாக்களாகும்.

இக்கோயில் அதிகாலை 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் நேரங்கள் மாறுபடும். பொதுவாக, எல்லா ஆலயங்களிலும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்பது கால பூஜைகள் நடைபெறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com