
12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் விஷ்ணுவை குலதெய்வமாக வழிபட்டார். 'திருபல்லாண்டு' பெரியாழ்வார் பாடிய நூலாகும். இதில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. நாலாயிர திவ்யபிரபந்தத்தில் முதலாயிரத்தில் 1 தொடங்கி 12 பாடல்கள் திருபல்லாண்டு பாடல்கள் ஆகும்.
திருபல்லாண்டு பாடல் எப்படி உருவானது தெரியுமா? ஒருமுறை மதுரையை ஆண்ட வல்லபதேவ பாண்டிய மன்னனுக்கு இறந்த பிறகு முக்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு பொற்கிளி பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்.
ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான பெரியாழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றி, 'மதுரை சென்று மன்னனின் சந்தேகத்தை தீர்த்து பொற்கிளியை பரிசாக பெற்று வா!' என்று கூறுகிறார். அரங்கனின் ஆணையை ஏற்று, மதுரை சென்று அங்கு நடந்த போட்டியில் வெற்றிப்பெற்று, மன்னரின் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார் பெரியாழ்வார்.
பிறகு பொற்கிளிகளை பரிசாக பெற்றுவிட்டு மன்னனின் பட்டத்து யானையின் மீது அமர்ந்து வருகிறார் பெரியாழ்வார். வெற்றிப்பெற்ற தன்னுடைய பக்தனுக்கு காட்சி கொடுப்பதற்காக பெருமாள் தன்னுடைய கருட வாகனத்தில் அமர்ந்து வந்து பெரியாழ்வார் முன்பு காட்சி தருகிறார்.
நாமாக இருந்தால், பெருமாளிடம் 'அது வேண்டும், இது வேண்டும்' என்று கேட்டிருப்போம். ஆனால், பெரியாழ்வாரோ பெருமாளின் மீது கண் திருஷ்டி பட்டுவிடும் என்று சொல்லி, கண் திருஷ்டி போக்குவதற்காக, 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்கிற திருபல்லாண்டை பாடினார்.
திருபல்லாண்டு பாடல் வைணவ பக்தியின் உச்சத்தை தொட்ட பாடலாகும். வல்லபதேவ பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்க்க பெரியாழ்வார் கனவில் தோன்றிய பெருமாளின் அருளாலே இப்பாடல் இயற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. திருப்பல்லாண்டில் வரும் இறுதி பாடல் அதனை படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் கிடைக்கும் பலன்களை பற்றி கூறும் 'பலச்ருதி' பாடலாகும்.
வேதத்தில் எப்படி 'ஓம்' என்னும் மந்திரம் முக்கியமானதோ அதைப்போல 'திருப்பல்லாண்டு
வைணவ இலக்கியத்திற்கு அடிப்படையானது என்று மணவாள மாமுனிவர் கூறுகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பல்லாண்டு பாடலை தினமும் பாடி வாழ்வில் வளம் பெறுவோம்.