
ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை மாவட்டம் மோதகத்தில் இருக்கும் அழகான குடைவரை கோவில் தான் ஸ்ரீ கோபாலசுவாமி மலைக்கோவில். மதுரையில் திருமங்கலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
மோதகம் என்னும் பகுதியில் இருந்த மக்களுக்கு அந்த மலையில், திருமால் மாடு மேய்க்கும் சிறுவனாக பலருக்கு காட்சி கொடுத்திருக்கிறார். அந்த பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு இந்த சிறுவன் யார் என்பது தெரியவில்லை. அந்த சிறுவன் வந்த பிறகு அந்தப் பகுதியில் நன்றாக மழை பெய்து விவசாயம் நன்றாக செழித்து மக்கள் வளமாக வாழ ஆரம்பித்துள்ளனர். அந்த ஊர் மக்களுக்கு சந்தேகம் வர தொடங்குகிறது. வந்திருக்கும் சிறுவன் தெய்வ சக்தியுடையவனா அல்லது அமானுஷ்ய சக்தியுடையவானா? என்ற எண்ணம் தோன்றியது.
அப்போது சிறுவன் ஒருநாள் கோபால சுவாமியாக பலருக்கும் காட்சி கொடுத்திருக்கிறார். இதை அறிந்த மக்கள் வந்திருப்பது பெருமாள் தான் என்று அவரை வழிப்பட ஆரம்பித்துள்ளனர். கொஞ்ச நாள் கழித்து அந்த சிறுவன் மாயமாக மறைந்துவிட்டான்.
இப்படி பெருமாளின் கால்பட்ட அந்த மலையில் மண்ணால் ஆன திருமேனியை மக்கள் செய்து வைத்து வழிப்பட ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக கோபால சுவாமியின் சக்தி அந்த சுற்றுவட்டாரத்தில் பரவி அழகான குடைவரை கோவிலை மக்கள் கட்டினார்கள்.
கோபால சுவாமி கோவிலை தூரத்தில் இருந்து பார்க்கும் போது தங்கம் போல ஜொலிக்கும். அதனால் இந்த மலைக்கு 'தங்கமலை' என்ற பெயரும் உண்டு. இங்கு ஒருகாலத்தில் தங்கம், வைரம் என்று கொட்டிக் கிடந்ததாகவும் அதை ஆங்லேயர் ஆட்சியின் போது எடுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் படுத்தக்கோலத்தில் அனந்தசயனத்தில் ரங்கநாதபெருமாள் காட்சி கொடுக்கிறார். இக்கோவிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் ஆஞ்சநேயர் கும்பிடுவது போல இயற்கையாகவே பாறை அமைப்பு அமைந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கும். இக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வந்த பெரியாழ்வாருக்கு மிகவும் பிடித்த கோவில் என்று சொல்லப்படுகிறது.
கோவிலுக்குள் சென்றதும் ரங்கநாதர் அழகிய சயனக்கோலத்தில் இருப்பதை காணலாம். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், பிரம்மா, கருடனுடன் காட்சிக் கொடுக்கிறார்.
மூலவர் கோபாலசுவாமி ருக்மணி, சத்தியபாமாவோடு இருக்கிறார். இயற்கையின் துணைக் கொண்டு காற்றோட்டம் வருவதற்கு ஏற்றப்படி கட்டப்பட்ட கோவில். மூலஸ்தானம் முதல் குடைவரை வாசல்வரை சங்கர் ஐயர் என்பவர் மலையைக் குடைந்து உருவாக்கியுள்ளார். இங்குள்ள மண்டபத்தில் 'கோவர்தனக்கிரி' என்ற மண்டபத்தை சங்கர ஐயர் மற்றும் பொதுமக்கள், யாசகம் எடுத்துக் கட்டியுள்ளனர்.
சித்திரா பௌர்ணமி, வைகாசி பௌர்ணமி, புரட்டாசி ஐந்து வார கருட சேவை, நவராத்திரி என அனைத்து விசேஷ நாட்களிலும் விஷேச திருவிழா நடைப்பெறுகிறது. இக்கோவில் இயற்கை அழகிற்கு நடுவில் பசுமையான சூழலில் கட்டப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. நீங்களும் இக்கோவிலுக்கு ஒருமுறை சென்று கோபாலசுவாமியை தரிசித்துவிட்டு வாருங்கள்.