
பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகு. பாம்பின் தலையும் மனித உடலும் கொண்டது கேது. ஸ்வர்பானு என்ற ஒரு அசுரனே ராகு-கேதுவானவர். இது எப்படி நடந்தது என்பதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளதல்லவா? வாருங்கள் அந்தப் புராணக் கதையினை தெரிந்து கொள்ளுவோம்.
ஒரு சமயம் சாபத்தின் காரணமாக இந்திரன் தனது சக்திகளை இழந்தான். இதை அறிந்த அசுரர்கள் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கினார்கள். இந்திரன் சாபம் வழங்கிய துர்வாச முனிவரை சந்தித்து சாபவிமோசனம் வேண்டி நிற்க அவரோ, “நீ மகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்து அவரிடம் உனது சாபத்தைப் பற்றிக் கூறி விமோசனம் கேள்” என்றார்.
துர்வாச முனிவர் சொன்னது போலவே இந்திரன், மகாவிஷ்ணுவை நினைத்து தவமியற்றினான். மகாவிஷ்ணுவிடம் தங்களை அசுரர்களிடமிருந்து காத்து அருளுமாறு வேண்டிக் கொண்டான்.
“திருப்பாற்கடலைக் கடைந்தால் அதிலிருந்து அமுதம் உண்டாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது என்றும் அசுரர்களிடம் தெரிவியுங்கள். இதைக் கேட்கும் அவர்கள் உடனே இதற்குச் சம்மதிப்பார்கள். அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையும் பணியைத் துவக்குங்கள்” என்றார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணு பாற்கடலை எவ்வாறு கடைவது என்பதையும் இந்திரனுக்கும் தேவர்களுக்கும் தெரிவித்தார். இந்திரன் அசுரர்களை அழைத்து பாற்கடலைக் கடையும் விஷயத்தைத் தெரிவித்தான். திருமால் குறிப்பிட்ட மந்தரமலையை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து தூக்கி பாற்கடலில் நிறுத்தினார்கள். வாசுகி என்ற மிகப்பெரிய பாம்பை அழைத்து அதை அம்மலையைச் சுற்றி கயிறு போலச் சுற்றினார்கள். பாற்கடலைக் கடையத் தேவையான மத்தும் கயிறும் தயாராகி விட்டது. திருமால் ஆணையிட, பாற்கடலைக் கடையும் பணி ஆரம்பமானது. மிகுந்த சிரமப்பட்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
பாற்கடலுக்குள்ளிருந்து காமதேனு என்ற பசு வெளியானது. தொடர்ந்து கற்பக விருட்சம் வெளியானது. பின்னர் உச்சஸ்சிரவஸ் என்ற அதிசய குதிரை வெளிப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐராவதம் என்றொரு வெள்ளை யானை வெளிப்பட்டது. பின்னர் பாரிஜாத மரம் வெளியானது. இவற்றைத் தொடர்ந்து அப்சரஸ் என்ற பெயருடைய தெய்வப் பெண்கள் வெளிப்பட்டனர். கடைசியாக தெய்வீகத் தன்மை கொண்ட தன்வந்திரி பகவான் கையில் அமுதக் கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். இதனைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
தன்வந்திரியைத் தொடர்ந்து மிகவும் பிரகாசத்துடன் திருமகள் லட்சுமி தேவி வெளிப்பட்டாள். லட்சுமி தேவி திருமாலோடு காட்சி அளித்தாள். இந்த தெய்வீகக் காட்சியில் தங்களை மறந்து நின்று கொண்டிருந்தார்கள். தேவர்கள். இதுதான் தக்க சமயமென உணர்ந்த அசுரர்கள் அமுதத்தை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்கள். தன்வந்திரியின் கையிலிருந்த அமுத கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தாங்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டது தேவர்களுக்குப் புரிந்தது.
உடனே அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். உடனே திருமாலும் தேவர்களுக்கு உதவிட முடிவெடுத்து மோகினி அவதாரம் எடுத்தார். மோகினி உருவத்தோடு அவர் அசுரர்கள் இருந்த இடத்திற்குச் சென்றார். தன்வந்திரியிடமிருந்து தட்டிப்பறித்த அமுதத்தை பங்கிடுவதில் அவர்களுக்குள் பெரும் சண்டை ஏற்பட்டது. மோகினியைக் கண்ட அசுரர்கள் அவள் அழகில் மயங்கி அமுதத்தை மறந்தார்கள்.
“ஒரு விஷயத்தை நீங்கள் உணர வேண்டும். இந்த அமுதத்தை எடுத்ததில் தேவர்களுக்கும் பங்குண்டு. அவர்களுக்குத் தராமல் நீங்கள் மட்டும் அருந்தினால் இதன் முழுப்பயன் உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்” என்றார்.
மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அவள் எதைச் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் இருக்க, மோகினி தேவர்களை அழைக்க அவர்கள் வந்தார்கள். தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் மற்றொரு புறமும் அமர்ந்தார்கள். முதலில் மோகினி அமுதத்தை தேவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினாள். அசுரர்களின் கவனமெல்லாம் மோகினியின் அழகில் கிடந்தது. ஆனால், தேவர்களின் கவனம் முழுக்க முழுக்க அமுதத்தில் இருந்தது.
அசுரர்களுக்கு அமிர்தத்தைத் தருவது ஆபத்தானது என்று எண்ணிய மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்து கொண்டிருந்தாள். மயக்கத்தில் இருந்ததால் அசுரர்களுக்கு இந்த சூழ்ச்சி தெரியவில்லை. அசுரர்களில் ஸ்வர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்து, உடனே தேவர்களைப் போல தனது உருவத்தை மாற்றிக்கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்தான். அவனை கவனிக்காத மோகினி ஸ்வர்பானுவிற்கும் அமிர்தத்தை வழங்க, அவனும் அதை உடனடியாகப் பருகி விட்டான். இதை அறிந்து கொண்ட சூரியனும் சந்திரனும் ஸ்வர்பானு ஒரு அசுரன் என்பதை உடனடியாக மோகினிக்கு உணர்த்தினர். உடனே மகாவிஷ்ணு உருவத்தில் இருந்த மோகினி அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு ஸ்வர்பானுவின் தலையைத் துண்டித்தார். உடல் வேறு, தலை வேறாகப் பிரிந்தாலும் அமிர்தத்தை உண்ட காரணத்தினால் உயிர் பிரியாமல் இருந்தது. அமிர்தத்தை உண்டதால் தலையும் அழியவில்லை. உடலும் அழியவில்லை. துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு பாம்பின் தலையும் உருவாகின. பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேதுவானது. இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும், ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழல் கிரகங்கள்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றன.
ஸ்வர்பானு செய்த தவறைச் சுட்டிக்காட்டிய மோகினி, அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்க மறுத்து தேவர்களுக்கு வழங்கினாள். இதனால் ஸ்வர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள் ஸ்வர்பானுவை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. விநோதமான உடல் அமைப்பைக் கொண்டதால் தேவர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
ராகுவும்-கேதுவும் வெட்டப்பட்ட போது ஒரு துண்டானது நாகேஸ்வரத்திலும் மற்றொரு துண்டானது கீழ்பெரும்பள்ளத்திலும் விழுந்ததாக ஐதீகம். ஏழு கிரகங்களும் ராசிச் சக்கரத்தில் வலமாகச் சுற்றி வருவர். ஆனால், ராகுவும் கேதுவும் அவர்களுக்கு எதிர் திசையில் சுற்றி வருவதாக ஐதீகம்.
எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருபவர் ராகு. ஆனால், அதற்கு நேர்மாறாக எதன் மீதும் ஆசைப்படாத குணத்தைத் தருபவர் கேது. பேராசைப்படும் குணத்தை ராகுவிற்கும் முற்றும் துறந்த முனிவரின் குணத்தைக் கேதுவிற்கும் கொடுத்துப் படைத்திருக்கிறான் இறைவன். ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதால் சர்ப்ப ப்ரீதிகளைச் செய்தால் நிழல் போல நம்மைத் தொடரும் துன்பங்கள் விலகிச் செல்லும் என்பது ஐதீகம்.