அழகர்கோவில் 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இடமாகும். சித்திரை திருவிழா என்றதுமே நம் நினைவுக்கு வருவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்தான். அழகர்மலை, சோலைமலை என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது அழகர் மலை. இங்கே மூலவராக அருள்பாலிக்கிறார் பரமசுவாமி. அங்கே உற்சவராய் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக அருள்பாலிக்கிறார் கள்ளழகர். இந்த அழகரையும், மலையையும் காவல்காத்து வருபவர் 18ஆம் படி கருப்பண்ண சுவாமி. அழகர்கோவிலின் ராஜகோபுரக் கதவு வருடம் முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும். வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
அழகரையும், அழகர் மலையையும் காவல் காப்பவர் 18ஆம் படி கருப்பண்ண சுவாமி. இவருக்கென்று தனி உருவமெல்லாம் கிடையாது. மூடப்பட்ட கதவு, குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் நிலை மாலை என கம்பீரமாக காட்சித்தருகிறார் கருப்பண்ண சுவாமி. இங்கு மிகப்பெரிய அரிவாள் உள்ளது. அழகர்மலைக்கு 18 ஆம் படி கருப்பண்ண சுவாமி காவல் தெய்வமாக ஆன கதையை பற்றி பார்க்கலாம்.
கேரள தேசத்தை ஆட்சிபுரிந்த அரசன் ஒருவன் ஒருமுறை அழகர்கோவிலுக்கு வந்தான். அழகர் பெயரில் மட்டும் அழகில்லை. தோற்றத்திலும் கொள்ளை அழகு. உலகில் இவர் அழகுக்கு நிகரான உற்சவமூர்த்தியில்லை என்பது அனைவரின் கருத்து. அதனால்தான் அதை கவர்ந்து போக நினைத்தான் மலையாள தேசத்து மன்னன் ஒருவன். பள்ளிக்கொண்டிருக்கும் அழகரை கண்டான். அழகரின் அழகை கண்ட அரசன் அதை தம்முடைய தேசமான கேரளத்துக்கு கொண்டு செல்ல எண்ணினான். நாடு திரும்பிய அரசன் 18 மந்திர தந்திரங்களில் தேர்ச்சிப்பெற்ற மந்திரவாதிகளை அழைத்து அழகரின் சக்தியை எடுத்து அழகரை கேரளம் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.
மன்னரின் ஆணைப்படி அழகர்மலை கோவிலை நோக்கி புறப்பட்டனர் 18 மந்திரவாதிகளும் அவர்களுக்கு காவலாக கேரள தேசத்து காவல் தெய்வமான கருப்பசுவாமி வெள்ளை குதிரை ஏறிமுன்னே சென்றது. காவல்தெய்வத்திற்கு பின்னே இவர்களும் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர். அனைவரும் அழகர்மலை அடைந்தனர். அழகரை கண்ட காவல் தெய்வம் அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது. அழகரின் தங்க ஆபரணங்களை கண்ட மந்திரவாதிகள் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தையும் மறந்து அழகரை தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கிச் சென்றனர்.
அழகரை கவர்வதற்கு முன் அவர் சக்தியை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆலயத்தில் மறைந்திருந்து மந்திரம் ஜெபிக்க ஒரு மந்திர மையை பயன்படுத்தினர். அந்த மந்திர மையை கண்களில், இமைகளில் பூசிக்கொள்ள அவரவர் உருவம் மறைந்துவிடும். அப்படி தந்திரமாக இருந்து அழகரின் சக்தியை களவாட முயன்றனர். இதை முறியடிக்க பெருமாள் கோவில் பட்டர் ஒருவர் கனவில் தோன்றி மந்திரவாதிகள் பற்றி எச்சரித்து மறைந்தார்.
பட்டர் மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார். அடுத்தநாள் நிவேதனத்துக்கு செய்யும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகை சேர்த்து ஆலயம் முழுவதும் உருட்டி வைத்தார். பொங்கலின் வாசனையில் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள் அதை எடுத்து தின்றனர். அடுத்தக்கணம் பொங்கலில்அதிக மிளகு சேர்க்கப்பட்டிருப்பதால், அதன் காரம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டனர். கண்ணீர் விட்டதில் கண் மை அழிந்து அவர்கள் உருவம் வெளிப்பட்டது. அவர்களை அங்கிருக்கும் நாட்டார்கள் பிடித்து கொன்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு படியில் புதைத்தனர்.
மந்திரவாதிகளுக்கு துணையாய் வந்த காவல் தெய்வத்தையும் மந்திரத்தின் மூலம் பிடித்துக்கட்டினர். அந்த தெய்வமோ அழகரின் அழகில் மயங்கி தான் இனி இங்கிருந்து காவல் செய்வதாக சொல்லியது. அதற்கு கூலியாக தினமும் அழகருக்கு செய்யப்படும் அர்த்த ஜாம நிவேதனங்களை தனக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்றளவும் 18ஆம் படி கருப்பாக இருந்து அழகரை பாதுகாக்கிறது. அந்த 18 மந்திரவாதிகளையும் புதைத்த 18 படிகளின் மீது ஏறி நின்று காவல் தெய்வமாக காட்சி தருகிறார் 18 ஆம்படி கருப்பண்ண சுவாமி.