Story about Lord shiva become a son of the king
Story about Lord shiva become a son of the king Image Credits: Times Now

மன்னனுக்கு மகனாக இருந்து சிவபெருமான் திதி கொடுக்கும் வரலாறு தெரியுமா?

Published on

சிவபெருமான் தமது பக்தர்களுக்கு அருள்செய்ய எந்த எல்லை வரையும் செல்வார் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில், தம் அடியவர் ஒருவரை, தனது தந்தையாகவே ஏற்று இன்றுவரை அவருக்குத் திதி கொடுத்து வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

திருவண்ணாமலை திருத்தலத்தை 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்து வந்தவர் வள்ளால மகாராஜா. இவர் ஒரு சிறந்த சிவபக்தர். இவருக்குக் குழந்தைகள் கிடையாது. தன்னுடைய பக்தனுக்கு ஒரு குறை என்றால் சும்மா இருப்பாரா சிவபெருமான்? அவர் பொருட்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்த சித்தம் கொண்டார்.

திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தேவதாசி வீடுகளுக்கும் தன்னுடைய சிவகணங்களை அனுப்பி வைக்கிறார் ஈசன். அது மட்டுமின்றி, தானும் ஒரு சைவத்துறவி கோலத்தில் மன்னன் முன் சென்று, ‘தனக்கு ஒரு தேவதாசி வேண்டும்’ என்று கேட்கிறார். மன்னரும் அவருக்கு ஒரு தேவதாசியை தருவதாக வாக்களிக்கிறார். ஆனால், அந்த நேரம் அவருக்கு ஒரு தேவதாசி கூட கிடைக்கவில்லை. ஏனெனில், எல்லா வீடுகளிலும் சிவகணங்கள் இருக்கின்றனர்.

மன்னருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மன்னரின் வருத்தத்தைப் புரிந்து கொள்கிறார் இளையராணி. அவர் தாமே தேவதாசியாக செல்வதாக மன்னரிடம் சொல்கிறார். ‘சிவபெருமானே நீயே துணை!’ என்று வேண்டிக்கொண்டு சைவத்துறவி இருக்கும் இடத்திற்கு செல்கிறார் இளையராணி.

அங்கே அந்த சைவத்துறவி ஒரு சிறு குழந்தையாக மாறியிருக்கிறார். இதைப் பார்த்த மன்னரும், இளையராணியும் அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சுகிறார்கள். அடுத்த நிமிடம் அங்கே அந்தக் குழந்தை மறைந்து, சிவபெருமான் அவர்களுக்குக் காட்சியளிக்கிறார்.

‘இந்த பூலோகத்தில் உன்னுடைய ஆயுள் முடியும்போது, யாமே உனக்கு மகனாக இருந்து ஈமச்சடங்குகளை செய்து முடிப்பேன். அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அந்தச் சடங்குகளை செய்வேன்’ என்றார் சிவபெருமான்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை பெரியகோயில் ரகசியங்களும் மர்மங்களும்: ஒரு அலசல்!
Story about Lord shiva become a son of the king

அதேபோல, வள்ளால மகாராஜாவின் இறுதி சடங்குகளை பள்ளிக்கொண்டாப்பட்டு அருகில் ஓடும் கௌதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார். அன்று தொடங்கி இன்று வரை அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தினத்தன்று திருவண்ணாமலையிலிருந்து பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்திற்கு சென்று வள்ளால மகாராஜாவிற்கு மகனாக இருந்து இன்றுவரை திதி கொடுத்து வருகிறார்.

கடவுளே தனது பக்தனுக்காக இறங்கி வந்து, அவரை தனது தந்தையாக ஏற்று திதி கொடுத்து வருகிறார் என்பது அவரது பெருங்கருணை உள்ளத்தை பறைச்சாற்றுகிறது. பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

logo
Kalki Online
kalkionline.com