ராவணன் ஒரு மிகப்பெரிய சிவபக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ராவணன் சிவபெருமானுக்காக தனது ஒரு தலையை இழந்த கதை தெரியுமா? அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
போரில் குபேரனை தோற்கடித்து அவனது சொத்துக்களையும், புஷ்பக விமானத்தையும் கைப்பற்றுகிறான் ராவணன். அந்த புஷ்பக விமானத்தில் ஏறி வந்துக்கொண்டிருந்தபோது இடையில் கயிலாய மலை காட்சி தருகிறது. கயிலாய மலையை நந்திதேவர் காவல் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ராவணனிடம், ‘இது பரமேஸ்வரர் குடிகொண்ட மலை. அதனால் இதன் மீது பறந்து செல்லக்கூடாது. விலகி செல்!’ என்று நந்திதேவர் கூறுகிறார்.
இதைக் கேட்டதும் ராவணனுக்கு பயங்கர கோபம் வந்து விடுகிறது. ‘ஏய்! குரங்கு முகம் உடையவனே, யாரைப் பார்த்து விலகிச் செல்லச் சொல்கிறாய்? இந்த மலையை பெயர்த்து எடுத்துவிடுவேன்’ என்று கூறுகிறான். அதற்கு நந்திதேவர், ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள். ஆனால், என்னை பார்த்து குரங்கு முகம் உடையவனே என்று கூறினாயே, உனது ராஜ்ஜியம் ஒருநாள் குரங்குகளாலே அழியும்’ என்று சாபம் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார்.
ராவணன் கயிலாய மலையை பெயர்த்து எடுக்க முயற்சிக்கிறான். ராவணனின் தலைக்கனத்தை அடக்க நினைத்த சிவபெருமான், தனது கால் கட்டை விரலை கயிலாய மலை மீது ஊன்றுகிறார். இதனால் ராவணன் கயிலாய மலைக்கு அடியிலே சிக்கிக்கொள்கிறான். மலையின் அழுத்தம் தாங்க முடியாமல் அழ ஆரம்பிக்கிறான்.
அப்போது அவன் முன் வாகீச முனிவர் தோன்றி, ‘ராவணா, இனி அழுது பிரயோஜனம் இல்லை. சிவபெருமானின் கோபம் தீர வேண்டும் என்றால் சாமகீதம் பாடு’ என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்.
தன்னுடைய தவறை உணர்ந்த ராவணன் தனது ஒரு தலையை கொய்து குடமாகவும், கைகளை தண்டாகவும், நரம்புகளை தந்தியாகவும் அமைத்து வீணையை தயாரிக்கிறான். அந்த வீணையை மீட்டி சிவபெருமான் உள்ளம் கனியுமாறு சாம கானம் பாட ஆரம்பிக்கிறான். அந்த இனிய இசை கயிலாயமலை எங்கும் பரவ ஆரம்பிக்கிறது.
சிவபெருமான் அந்த இசையில் மயங்கி தனது கால் கட்டை விரலை எடுக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் ராவணன் கயிலாய மலையை கீழே வைத்து விட்டு தன்னுடைய இசையை முடித்துக்கொண்டான். ராவணனுக்கு அருள்புரியும் வகையில் சிவபெருமான், ‘சந்திரகாசம்’ என்னும் வாளையும், முப்பத்தி முக்கோடி ஆயுளையும் ராவணனுக்கு வழங்குகிறார். அதுமட்டுமில்லாமல், தனக்கு இணையான ‘ஈஸ்வரன்’ என்ற பட்டத்தையும் சிவபெருமான் ராவணனுக்கு வழங்கி அருள்புரிந்தார்.