முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோயில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும். முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்து இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோயிலாகும்.
திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு ‘வீரபாகு க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்ரனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ‘மாப்பாடு’ என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது ‘மனப்பாடு’ என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்ரனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
திருச்செந்தூரில் பாலசுப்ரமணிய சுவாமி, சண்முகர் என்ற இரண்டு மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர் அளவாய்பெருமான் என்ற நான்கு உத்ஸவர்களும் உள்ளனர்.
இக்கோயிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் கோயில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், ‘மணியடி’ என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.
மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு ‘பாம்பறை’ என்ற பெயரும் உண்டு.
மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.
இரவு 9.45க்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நெய்வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.
தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, ‘கங்கை பூஜை’ என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.
பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோயில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோயில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.