சூரசம்ஹாரத்தின் கதை தெரியுமா?
பிரம்மாவின் இரு புதல்வர்களான தட்சன், காசிபன் ஆகியோர் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். இதில் தட்சன் சிவபெருமானுக்கே மாமனாராகியும், தனது அகந்தை காரணமாக இறுதியில் சிவபெருமானால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அதேபோன்று, காசிபன் ஒரு நாள் அசுர குரு சுக்ராச்சாரியாரால் ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகினில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து அசுரப் பெண்ணுடன் மனித உருவத்தில் முதலாம் ஜாமத்தில் இணைந்த காசிபனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.
காசிபன் தனது பிள்ளைகளிடம் ‘சிவபெருமானை வடதிசை நோக்கிச் சென்று தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்’ என உபதேசம் செய்தான். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வேண்டிய வரம் கேட்டதோடு, தனக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால், சிவனோ பிறப்பு என்றால் இறப்பு இருக்கும். உனக்கு எந்த வகையில் அழிவு வர வேண்டும் என கேட்டார். அப்போதும் புத்திசாலித்தனமாக ‘தனக்கு ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் அழிவு வரவேண்டும்’ என கேட்டு வரத்தையும் பெற்றான். இதனால் சூரபத்மனுடன் பிறந்தவர்களும் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையில் அடைத்தனர்.
இதைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தங்களை காக்கும்படி முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது நெற்றிக்கண்ணை திறக்க அதிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் சரவண பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது கொண்டு சேர்த்தான். அந்த ஆறு தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாற, ஆறு கார்த்திகை பெண்கள் அவர்களை பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டி அணைக்க, அவர்கள் ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாக தோன்றினார்.
இத்திருவுருவைப் பெற்றதால் முருகப்பெருமானுக்கு ‘ஆறுமுகசாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. தேவ குரு பிரகஸ்பதி மூலம் முருகப்பெருமான் அசுரர்களின் வரலாற்றினை அறிந்து திருக்கரத்தில் வேலேந்தி, ‘தேவர்களே நீங்கள் அசுரர்களுக்கு அஞ்சத்தேவை இல்லை. உங்கள் குறைகளைப் போக்கி அருள் செய்வதே என் வேலை’ என்றார். அதைத் தொடர்ந்து அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் காசிபன் மகனது எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்து, ஆறாம் நாள் எஞ்சியவன்தான் சூரபத்மன். அப்போதும் முருகப்பெருமான், சூரபத்மனிடம் தனது சேனைத்தலைவரான வீரபாகுபை தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனாலும், சூரபத்மன் திருந்தவில்லை.
இறுதியில், சூரனை வதைக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப்பெருமானை அனுப்பினர். சூரனோ கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். முருகனும் அந்த நகரை அடைந்தார். சூரன் முருகப்பெருமானை பார்த்து, ‘உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. நீயா என்னைக் கொல்ல வந்தாய்’ என்று ஏளனம் செய்தான். முருகன் தனது உருவத்தைப் பெரிதாக்கி அவனை பயமுறுத்தியதோடு, சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார். சூரனுக்கோ, ஒரு சிறுவனை கொல்வது தனது வீரத்துக்கு இழுக்கு என்பதால் முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை.
இதனால் முருகப்பெருமானும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்து, தனது விசுவரூபத்தை அவனுக்குக் காட்டியதால் அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. சூரனும் ‘உன்னை பயமுறுத்த மாறிய கடலின் வடிவாக இங்கு தங்குகிறேன். உன்னைத் தேடி வரும் பக்தர்கள் என்னில் வந்து நீராடியதுமே அவர்களின் ஆணவம் நீங்கி, உனது திருவடியே கதி என சரணம் அடையும் புத்தி பெற வேண்டும்’ என்றான். அந்த வரத்தை அவனுக்கு முருகனும் அளித்தார். ஆனால், சூரனுக்கு ஆணவம் தலைதூக்க அவன் மாமரமாக மாறி தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தனது தாய் உமா தேவியிடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தவுடன் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதில் ஒரு பாதியை மயிலாகவும் மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன், தனது வாகனமாகவும் கொடி சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும் பரம காருண்ய மூர்த்தியானவர் முருகன். சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். ஏனென்றால், உயிரைக் கொல்லும் ஆயுதம் அல்ல வேல். அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்த வழிபாட்டு பொருள். அதனால்தான், ‘வேல் வேல் வெற்றிவேல்’ என்றும் வழங்குகிறார்கள் பக்தர்கள்.
கந்தபெருமானால் ஐப்பசி சஷ்டி திதியில் சூரனின் வதம் நிகழ்ந்ததால் இது கந்த சஷ்டி ஆயிற்று. கந்த சஷ்டி திருநாளில் சக்தி வேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சிவ பூஜை செய்ய விரும்பினார் முருகப்பெருமான். இதற்காக கட்டப்பட்ட கோயில்தான் திருச்செந்தூர் ஆலயம்.
சூரனை சம்ஹாரம் செய்த பின்னர் ஜயந்திநாதர் பிராகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னிதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் அந்தக் கண்ணாடியின் தெரியும் ஜயந்தி நாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால் நிழல் எனப் பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாகவே இந்த அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்த நிகழ்வுக்குப் பின் முருகன் சன்னிதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார விழா நிறைவு பெறும்.
தொடர்ந்து தேவர்களுக்கு முருகப்பெருமான் செய்த உதவிக்கு கைமாறாக இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். அதனால் மறுநாள் முருகன், தெய்வானை திருமணம் வைபவத்தோடு கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.