திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கு எதிரே நந்தியும், இரண்டு மயில்களும் இருப்பது ஏனென்று தெரியுமா?
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளேக் கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகக் காண முடியும். மற்ற நாட்களில், அங்கவஸ்திரம் எனும் மேல்துண்டால் மூடி விடுவார்கள்.
கருவறையில் முருகன் இடது கையில் தாமரை மலருடன் ஜடாமுடி கொண்டு சிவயோகி போல காட்சி தருகிறார். முருகனின் சிலைக்குப் பின்னால் இடது புறச் சுவரில் போரில் வெற்றி பெற்று வந்த முருகன் பூசை செய்ததாக சொல்லப்படும் லிங்கம் ஒன்று இருக்கிறது. அதற்கு முதலில் பூசை செய்த பிறகே முருகனுக்குப் பூசை செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. அப்போது, அகத்தியர் வழிகாட்டுதலின் கீழ், பஞ்ச லிங்கங்களை மணலிலேப் பிடித்து வழிபாடு செய்து அந்தத் தோஷம் நீங்கப் பெற்றார். இந்த வழிபாட்டிற்கு பார்த்திபலிங்க பூஜை என்று பெயர்.
முருகனுக்கு மூன்று மயில்கள் இருக்கின்றன மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில். இந்த மயிலை மந்திர மயில் என்பர். சூரசம்ஹாரத்திற்கு முன்பு வரை முருகனுக்கு இந்திரனே மயில் வாகனமாக இருந்தான். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இந்த மயிலை, தேவ மயில் என்பர் அதன் பின்பு, சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து திருச்செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன.
முருகன் சூரனை வென்ற பின் இந்திரனுக்குத் தேவலோகத் தலைமைப் பதவியைக் கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்கங்களை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, கருவறைக்கு எதிரே சிவனுக்குரிய நந்தி, இரண்டு மயில்களும் இங்கு இருக்கின்றன. இந்த அமைப்பு, திருச்செந்தூர் தவிர்த்து, வேறு எந்த முருகத் தலத்திலும் இல்லை.