மார்கழி மாதத்தில் வருகிற பௌர்ணமி நாளன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டு மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையே திருவாதிரை திருநாளாகும். சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் காரணம், வெகு காலமாக தவத்தில் இருந்த பார்வதி தேவியும், சிவபெருமானும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட நாளாக கருதப்படுகிறது.
அத்தகைய சிறப்பான திருவாதிரை நாளில் சிவனுக்கு படைக்கப்படும் பிரசாதமே திருவாதிரை களியாகும். இந்த திருவாதிரை களி உருவான வரலாறு குறித்து உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சேந்தனார் என்னும் சிவனடியார் விறகுகளை வெட்டி விற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து தினமுமே ஒரு சிவனடியாருக்கு உணவளிக்காமல் தானும் உண்ணுவதில்லை என்ற கொள்ளையை பின்பற்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் பெய்த மழையால் விறகுகளெல்லாம் நனைந்து அதை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது தன்னிடம் வீட்டில் இருக்கின்ற பொருட்களான அரிசி மற்றும் வெல்லத்தை பயன்படுத்தி அருமையான களியை தயாரித்து வைத்துக்கொண்டு சிவனடியாரின் வருகைக்காக காத்திருக்கிறார். வெகுநேரமாகியும் யாருமே வராததால் மனம் வருந்தினார் சேந்தனார்.
இதைக் கண்ட சிவபெருமான் தன் பக்தனின் பக்திக்கு மனமிரங்கி தானே சிவனடியார் ரூபத்தில் சேந்தனாரின் இல்லத்திற்கு வருகை தருகிறார். சேந்தனாரின் இல்லத்தில் களியுண்ட சிவபெருமான் மீதமிருந்த களியையும் மறுவேளை உணவுக்காகக் கேட்டிருக்கிறார். அடுத்த நாள் அர்ச்சகர்கள் கோயில் நடையை திறந்தபோது, நடராஜர் திருப்பாதங்களுக்கு முன்பு களி சிதறல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். அதோடு இந்த இழி செயலை யார் செய்திருப்பார்கள் என்று யோசித்த சமயம், ஈசனே அசரீரியாக, தாமே சேந்தனார் வீட்டில் களி உண்டு மறுவேளைக்கும் கொண்டு வந்தோம் என்று கூறுகிறார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அரசர் சேந்தனாரை பார்க்க ஓடோடி வருகிறார். சிவபெருமானே தனது வீட்டிற்கு வந்து களியுண்டதால் மனம் நெகிழ்ந்துப் போகிறார் சேந்தனார்.
இதைத் தொடர்ந்தே ஒவ்வொரு வருடமும் திருவாதிரை நாளன்று சிவனுக்கு மிகவும் பிடித்த களியையும், தாளகத்தையும் பிரசாதமாக பக்தர்கள் படைக்கின்றனர். களியை அரிசி, வெல்லம், பருப்பு, தேங்காய், நெய் பயன்படுத்தி செய்கின்றனர். தாளகத்தை 7 வகையான காய்கறிகளான வெண்பூசணி, உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பூசணி, பீன்ஸ், சேப்பங்கிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி செய்கிறார்கள். இதுவே திருவாதிரை களி உருவான கதையாகும்.