சென்னை அரசு மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகளின் படம் இருப்பதை இதுவரை கவனித்ததுண்டா? சரி, மருத்துவமனையில் எதற்கு ஆன்மீகவாதியின் படத்தை வைத்திருக்கிறார்கள்? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1923 ஆம் ஆண்டு பாம்பன் சுவாமிகள் சாலையில் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது அவரின் காலில் ஒரு வண்டி ஏறி கால் எலும்பு முறிந்துவிட்டது. உடனே அவரை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அப்போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. இந்த முதுமையான வயதில் எலும்பு முறிவு சரியாவது என்பது சுலபமான காரியம் அல்ல.
அங்கிருந்த பிரிட்டீஸ் டாக்டர்ஸ் இவரின் நிலையைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்தால்தான் இந்த கால்முறிவு குணமாகும் என்று கூறிவிட்டனர். பாம்பன் சுவாமி மிகபெரிய முருகபக்தர். முருகனின் மீது உள்ள அன்பினால் சண்முக கவசம் இயற்றியவர். அந்த சண்முக கவசத்தை தொடர்ந்து பாடிக்கொண்டேயிருந்தார். சரியாக பத்தாவது நாள் அவர் தங்கியிருந்த வார்டுக்கு இரண்டு மயில்கள் வந்தது. மயிலுடன் முருகனும் வந்தான்.
அடுத்தநாள் அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்களால் அவர்கள் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. பாம்பன் சுவாமிகளின் கால் முழுமையாக குணமடைந்திருந்தது. இதை ஊர்ஜிதப்படுத்த X-ray கூட எடுத்துப் பார்த்தார்கள் கால் முறிந்ததற்கான எந்த தடயமுமேயில்லை. இந்த அதிசய நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் இன்றைக்கும் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகளின் படமும், இந்த நிகழ்வைப் பற்றிய வரலாற்றையும் எழுதி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளை நினைவுக்கூறும் விதமாக திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத வளர்பிறை பிரதமையன்று மயூர வாகன சேவை நடத்தப்படுகிறது.
திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடத்தில் சிறிய முருகன் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கே பாம்பன் சுவாமிகளின் கூற்றான, 'என்னை யாதரித்தருள் ரகசிய சக்தி என்னை நம்பியோரை ஆதரியாது நிற்குமோ? ஐயம் வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். இதுபோலவே முருகனை நம்பியோரை அவன் எப்போதுமே கைவிட்டதில்லை. ‘யாமிருக்க பயமேன்!’ என்று அவன் பக்தர்களை காக்க ஓடோடி வரும் முருகனின் அன்பிற்கு இந்த சம்பவமே ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.