
பட்டினத்தார் மிக பெரிய செல்வந்தராக இருந்தவர். சிவன் மீதுக் கொண்ட பக்தியால், தன்னுடைய செல்வங்களையெல்லாம் துறந்துவிட்டு கோவில் கோவிலாக சென்று சிவபெருமானை வழிப்பட ஆரம்பித்தார். பத்திரகிரியார் என்னும் அரசன் பட்டினத்தாரின் சீடனாக இருந்தார். பட்டினத்தாருக்கு முக்தி கொடுக்கும் முன்னரே பத்திரகியாருக்கு முக்தி கொடுத்தார் சிவபெருமான்.
'சிவபெருமானே! எனக்கு எப்போது முக்தி கொடுப்பீர்கள்' என்று பட்டினத்தார் சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் பட்டினத்தார் கையில் ஒரு கரும்பை கொடுத்து, 'இந்த கரும்பு எங்கு எப்போது இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி கிடைக்கும். அதுவரை என் திருத்தலங்களுக்கு சென்று என்னை வழிப்பட்டுவிட்டு வா!' என்று சொல்லிவிட்டு சிவபெருமான் மறைந்து விடுகிறார்.
பட்டினத்தாரும் கையில் கரும்போடு சிவதலங்கள் ஒவ்வொன்றாக செல்கிறார். திருவெண்காடு, சீர்காழி என்று பல இடங்களுக்கு சென்று சிவபெருமானை போற்றி பல பாடல்கள் பாடுகிறார். கடைசியாக பட்டினத்தார் வந்த இடம் தான் சென்னையில் உள்ள திருவொற்றியூர் ஆகும்.
ஒவ்வொரு சிவதலங்களுக்கு செல்லும் போதும் கரும்பினுடைய நுனிப்பகுதியை கடித்துப் பார்ப்பார். ஆனால், எந்த இடத்திலேயும் கரும்பு இனிக்கவில்லை. திருவொற்றியூரில் கரும்பின் நுனிப்பகுதியை கடித்தும் பார்க்கும் போது கரும்பு அப்படி இனிக்கிறது. அப்போது தான் உணர்கிறார், 'இங்கே தனக்கு முக்திக் கிடைக்கப் போகிறது என்பதை'.
பட்டினத்தார் அங்கே சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுவது வழக்கம். ஒருநாள் சிறுவர்களை கூப்பிட்டு, 'நான் இந்த குழிக்குள் இறங்குகிறேன். என்னை மண்ணை வைத்து மூடுங்கள். நான் வேறு இடத்தில் வருவேன்' என்று கூறினார். சிறுவர்களும் அவ்வாறே அவரை மண்ணை வைத்து மூடுகின்றனர். ஆனால், ரொம்ப நேரம் ஆகியும் பட்டினத்தார் வெளியிலே வரவேயில்லை. உடனே சிறுவர்கள் மண்ணை தோண்டி பார்க்கிறார்கள். அங்கே பட்டினத்தார் சிவலிங்கமாக இருந்தார்.
இதைப்பற்றி ஊர் மக்களிடம் சிறுவர்கள் கூற, மக்கள் அனைவரும் வந்து பக்தி பரவசத்துடன் அந்த சிவலிங்கத்தை வணங்குகிறார்கள். சிவலிங்கம் இருந்த இடத்தில் கோவிலைக் கட்டுகிறார்கள். குழிக்குள்ளே சென்ற பட்டினத்தார் சிவலிங்கமாக மாறியிருந்தார். ஈசன் அவருக்கு முக்தியை அளித்தார். பட்டினத்தார் மோட்சம் அடைந்த நாள் ஆடி மாத உத்திராட நட்சத்திர நாள். அன்றைக்கு பட்டினத்தாரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முக்தியடைந்த பட்டினத்தாரின் திருக்கோவில் திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கி அமைந்திருக்கிறது.