
சிறந்த ஆற்றல், துணிவு, தெய்வ பக்தி, புலனடக்கம், தர்ம வழிபாட்டு சிந்தனை, உழைப்பு, விருந்தோம்பல், பொதுநலம் பேணுதல், சுறுசுறுப்பு, கற்பு நெறி ஆகியவை இருக்கும் இடங்களில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். ‘பெற்றோரையும் குருவையும் மதிக்கும் இடங்களிலும், விடியற்காலை எழுபவர்களின் இல்லங்களிலும் மகாலட்சுமி வாசம் புரிகிறாள்’ என்கிறது பிரம்ம வைவர்த புராணம். மகாலட்சுமி தாயார் தானவர், வானவர், மன்னவர் என்றெல்லாம் வேறுபாடு பார்ப்பதில்லை. ‘தர்மம், சத்தியம், அடக்கம், தானம் செய்யும் மனம், கடமை நித்ய கர்மங்களைச் செய்தல், கொடை, வேதம் மற்றும் இறைவனைப் போற்றுதல், நீத்தார் வழிபாடு செய்தல் ஆகியவற்றை செய்பவர்கள் யாராயினும் அவர்களிடத்தில் நீங்காமல் இருப்பேன்’ என்று மகாலட்சுமி தாயார் இந்திரனிடம் கூறினாள் என்கிறது புராணம்.
மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வம் தோன்றியதால் வில்வ மரத்திற்கு, ‘ஸ்ரீ விருட்சம்’ என்று பெயர். செல்வத்தைக் கொடுக்கும் சக்தி வில்வ இலைக்கு இருக்கிறபடியால் அங்கே வாசம் செய்கிறாள். வில்வத்தின் கோடு வேதம் ஆகும். வில்வ மரத்தின் வேர் பதினொரு கோடி ருத்திரருக்கு சமமாகும். அதனால் சிவ அர்ச்சனைக்கு இது மிகவும் உகந்தது.
திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீமகாலட்சுமிக்கு வில்வார்ச்சனை அதி விசேஷமாக நடத்தப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாயகி தாயாரின் தல விருட்சம் வில்வ மரமாகும். தேகம், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யப்படும் கர்மங்களை அனுஷ்டிப்பவர்களிடம் மட்டுமே அவள் வசிப்பாள்.
மனம்: பிறர் பொருளை விரும்பக் கூடாது. பிராணிகளிடம் அன்புடன் இருக்க வேண்டும். பாவம், புண்ணியங்களுக்கு தக்கபடிதான் பகவான் அருளுவார்.
வாக்கு: நல்ல பேச்சு, இனிமையாக பேசுவது, கோள் சொல்லாமல் இருப்பது, உண்மையை பேசுவது ஆகிய நாலு கர்மாக்கள் நிறைந்தவர்களிடம் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
காயம்: பிறரை இம்சைப்படுத்துவது, திருடாமல் இருப்பது, பரதாரங்களை தொடாமல் இருப்பது ஆகிய மூன்று கர்மாக்களை அனுசரிப்பவர்கள் ஆகிய பத்து கர்மாக்களை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களிடம் திருமகள் நிச்சயம் வாசம் செய்வாள் என்பது முன்னோர்களின் கூற்றாகும்.
மகாலட்சுமி தாயார் எல்லா இடங்களிலும் வாசம் புரிவதில்லை. அதற்கு நமக்கு பூர்வ புண்ணியம் வேண்டும். ஸ்ரீமன் நாராயணர் லட்சுமி தேவியோடு வீற்றிருக்கும்போது தேவி தங்கியிருக்கும் இடங்கள் குறித்து விவரிக்குமாறு கேட்க, அதற்கு தேவி சொல்கிறாள், ‘அழகான, எளிமையான தோற்றம் உடைய பெண் எந்த வீட்டில் வசிக்கிறாளோ அங்கு தங்குவதாகவும், எங்கு வெண்மை நிறமுடைய மாடப்புறாக்கள் கூடமைத்து மகிழ்ச்சியோடு வாழ்கின்றனவோ அங்கு, சண்டை சச்சரவுகள் பிரச்னைகள் ஆகியவற்றை விரும்பாத பெண் எங்கு வாழ்கிறார்களோ அங்கு தாம் விருப்பமுடன் தங்குவதாகவும், நெற்குவியல்களும் மற்ற தானியங்களும் எந்த இடத்தில் சிதறாமல் ஒழுங்காக குவிக்கப்பட்டுள்ளனவோ அங்கும் நன்றாக தீட்டப்பட்ட வெள்ளிமணி போன்ற அரிசி குவியல்கள் எங்கே இருக்கின்றதோ அங்கும், இனிய வார்த்தைகளால் அன்புடன் பேசி மற்றவர்களை மகிழ்விப்பவனுடைய இல்லங்களிலும், தான் உண்ணுகிற உணவை மற்றவருக்கு எடுத்து வைத்து கொடுப்பவர் உள்ள இடத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
மகாலட்சுமி வாசம் செய்யும் சில சின்னங்கள்:
வலம்புரிச் சங்கு: சங்குகளில் சிறந்தது வலம்புரிச் சங்கு. இது இறை வழிபாட்டில் பலவாறு பயன்படுகிறது. இது இருக்கும் இடத்தில் செல்வ வளம் பெருகும். செந்தாமரை பூ என்றாலே மகாலட்சுமி உறைகின்ற செந்தாமரை பூவையே குறிக்கும். கல்விக்கும் செல்வத்திற்கும் இதை சின்னமாகப் போற்றுகின்றனர்.
யானைகள், மீன்கள்: எதிரெதிர் முரணிய இரட்டை யானைகளும் இரட்டை மீன்களும் மகாலட்சுமியின் சின்னங்களாக மதிக்கப்படுகின்றன.
ஸ்வஸ்திக்: இது உலகளாவிய பழைய சின்னம். விநாயகருக்கும் மகாலட்சுமிக்கும் உரியது. மங்கலத்தின் அதிர்ஷ்ட சின்னம். சிலர் ஸ்வஸ்திக் சின்னத்தை முதலில் எழுதிய பின்னரே புது கணக்குகளைப் பதிவு செய்கின்றனர். ஸ்வஸ்திக் வடிவத்தையே மகாலட்சுமியாகப் போற்றுகின்றனர்.
மஞ்சள்: மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்கின்றாள். ஆகவே, இறைவழிபாட்டிற்கும் மற்ற நல்ல காரியங்களுக்கும் இவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன. மஞ்சளும் மஞ்சள் நிறமான பொருட்களும் மங்கலமானது. மஞ்சளால் பிள்ளையாரை பிடித்து வைத்து நல்ல காரியங்களைத் தொடங்குகின்றனர். மஞ்சளும் அரிசியும் கலந்த அட்சதையும் மங்கலப் பொருளே.
குங்குமம்: கூந்தலின் வகிட்டிலும் நெற்றியின் மையத்திலும் குங்குமத்தை திலகமாக வைப்பது மிகப்பெரிய பண்பாடு. மகாலட்சுமி வீற்றிருக்கின்ற வட்ட பீடம் அது. எனவே, மகாலட்சுமிக்கு திலகவதி, குங்குமச் செல்வி என்ற பெயர்களும் அமைந்துள்ளன.
ஸ்ரீசூரணம்: ஸ்ரீமந் நாராயணனின் தேர்ந்த பன்னிரு திருநாமங்களைக் கூறியபடி உடலின் பன்னிரு இடங்களில் திருநாமங்களை புனைய வேண்டும் என்பது விதியும் மரபும் ஆகும். திருநாமத்தின் இரு வெள்ளைப் பட்டைகள் நாராயணனின் காலடி. இந்த சின்னங்களின் நடுவில் உள்ள ஸ்ரீ சூரணம் லக்ஷ்மிகரமான தூள் மகாலஷ்மியின் சின்னம். திருநாமங்களை புனைந்தவர்களுக்கு ஸ்ரீ மகாலஷ்மி, நாராயணர் இருவரும் காப்பார்கள். பொன் என்றாலே மகாலட்சுமி. அதனால்தான் பொற்காசுகளில் மகாலட்சுமியின் வடிவத்தைப் பொறிக்கின்றனர்.