மதுரையில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். அத்தகைய சிறப்புமிக்க வைகை ஆறு தோன்றிய வரலாறு தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. கல்யாணத்திற்கு முனிவர்கள், தேவர்கள், ரிஷிகள் என்று மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
கல்யாணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து பரிமாறப்படுகிறது. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். இருந்தாலும் உணவு பெரும் அளவில் மீதம் இருக்கிறது. இதைப் பற்றி மீனாட்சியம்மன் சிவபெருமானிடம் சொல்கிறார். உடனே சிவபெருமான் தன்னுடைய பூதகனங்களில் ஒருவரான குண்டோதரனை அழைத்து சாப்பிடச் சொல்கிறார்.
குண்டோதரன் சென்று எல்லா உணவையும் சாப்பிட்டு முடித்துவிடுகிறார். மேலும், ‘இன்னும் எனக்குப் பசிக்கிறது. உணவு தாருங்கள்’ என்று கேட்கிறார். அங்கிருப்பவர்கள் அவர்களால் முடிந்தவரை சமைத்து போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் குண்டோதரனுக்கு பசி அடங்கவேயில்லை. மீனாட்சியம்மனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதைப் பற்றி சிவபெருமானிடம் சொல்கிறார். உடனே சிவபெருமான் பூமியிலே மூன்று குழிகளைத் தோண்டுகிறார். குழியிலிருந்து உணவுகள் வருகின்றன. அந்த உணவுகளை சாப்பிட்டு முடித்ததும்தான் குண்டோதரனுடைய பசி அடங்குகிறது.
ஆனால், இப்போது தண்ணீர் தாகம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. அங்கிருந்த அண்டா குண்டாவில் இருந்த அனைத்து தண்ணீரையும் குடிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும், அவருடைய தாகம் அடங்கவில்லை. இது சிவபெருமானுக்குத் தெரிய வர, குண்டோதரனை அழைத்து தன்னுடைய தலையை சற்று சாய்க்கிறார். சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நதி கரைப்புரண்டு ஓடுகிறது. அதை தனது கைகளால் பிடித்து குண்டோதரன் குடித்து அவன் தாகத்தை போக்கிக்கொள்கிறான். வானத்திலிருந்து பூமிக்கு வந்த ஆறு வைகை என்று கூறப்படுகிறது. ‘வையம்’ என்றால் பூமி, ‘யை' என்றால் மேலிருந்து வருவது என்று பொருள். ‘வையை’ என்பதே நாளடைவில் மருவி வைகையானது.
கங்கை பூமிக்கு வருவதற்கு முன்பு சிவனிடம் ஒரு வரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, இந்த ஆற்றில் குளிப்பவர்களின் அனைத்து பாவங்களும் நீங்கிவிட வேண்டும் என்பதுதான் அந்த வரம். சிவபெருமானும் அதை ஏற்றுக் கொள்கிறார். அதைத் தொடர்ந்துதான் கங்கை பூமிக்கு வந்தது என்று கூறப்படுகிறது. வைகையை ‘சிவகங்கா’ என்றும் அழைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
மதுரையில் வைகை ஆறு ஓடுவது, அழகான பூமாலை போன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். இது மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியம்மனுக்கு போடப்படும் மாலை என்று வைகையாற்றை வர்ணிக்கிறார்கள் கவிஞர்கள்.