‘நேரமே சரியில்லை’ என்று நிறைய பேர் புலம்புவதை கேட்டிருப்போம். நல்ல நேரம் வரும் பொழுது மகிழ்ச்சியடைவோம். இதுவே கெட்ட நேரத்தில் மட்டும் கடவுளின் மீது பழி போட்டு விடுவோம். அப்படிப்பட்ட நேரத்தை மாற்றி நல்ல நேரம் அமைத்துத் தருவதற்கும் ஒரு கோயில் இருக்கிறது என்றால் விட்டு விடுமோ என்ன? இத்தனைக்கும் அந்தக் கோயில் தமிழ்நாட்டிலேயே உள்ளது என்பதுதான் ஆச்சரியம்.
அதுதான் ஸ்ரீ காலதேவி கோயில். இக்கோயில் மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள எம்.சுப்பலாபுரம் அருகில் சிலார்பட்டி என்ற கிராமத்தில் உள்ளது. இக்கோயில் பௌர்ணமி, அமாவாசைக்கு மிகவும் பிரசித்து பெற்றது. அந்த நாட்களில் மட்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் சாதாரண நாட்களில் செல்வதை விட, இதுபோன்ற விசேஷ நாட்களில் செல்வது சிறப்பு. இது முழுக்க முழுக்க நேரத்திற்கான கோயிலாகும். கோயில் கோபுரத்திலே, ‘நேரமே உலகம்’ என்று எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கால தேவி காத்தல், அழித்தல், நவக்கிரகங்கள், பஞ்ச பூதங்கள், நட்சத்திரங்கள் என்று எல்லாவற்றையும் இயக்கும் சக்தியை பெற்றவள். நேரத்தின் அதிபதியான கால தேவியால், ‘ஒருவரது கெட்ட நேரத்தை, நல்ல நேரமாக மாற்ற முடியும்’ என்பது இக்கோயிலின் தத்துவமாகும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இக்கோயிலின் நடை திறக்கப்படும். இரவு முழுவதும் பக்தர்களுக்கு கால தேவி தரிசனம் தருவாள். சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படும். இக்கோயிலில் பௌர்ணமியும் அமாவாசையுமே விசேஷமான நாளாகும். இதுவே கால தேவிக்கு உகந்த நாளாகும். இப்படி ஒரு அதிசய கோயில் உலகிலேயே இது ஒன்றுதான் உள்ளது.
கால தேவியை வழிபடும் முறை: இக்கோயிலை வலமிருந்து இடமாக 11 முறையும். பின்பு இடமிருந்து வலமாக 11 முறையும் சுற்றி வந்து கால தேவிக்கு 11 நெய் விளக்குகளை ஏற்றி விட்டு, பின்பு கருவறையில் உள்ள கால தேவியின் முன்பு இருக்கும் காலச்சக்கிரத்தில் அமர்ந்து 11 வினாடிகள் கால தேவியை தரிசிக்க வேண்டும்.
கால தேவியை தரிசிக்கும்போது,‘ எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று மனதில் நினைக்காமல், ‘இனி எனக்கு எல்லாமே நல்லதாகவே அமைய வேண்டும்ஞ என்று நினைத்து தரிசிக்க வேண்டும். நம்முடைய கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் ஆற்றல் கால தேவிக்கு உண்டு என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.