மச்சாவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவிற்கு ஏற்பட்ட சோதனைகள் தெரியுமா?

மச்சபுரீஸ்வரர் - சுகந்த குந்தலாம்பிகை
மச்சபுரீஸ்வரர் - சுகந்த குந்தலாம்பிகை

கவான் மஹாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும். மச்சம் என்றால் மீன் என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த அசுரனை அழைப்பதற்காக
ஸ்ரீ மஹாவிஷ்ணு கிருத யுகத்தில்  எடுத்த அவதாரம் இது.

ஏனைய அவதாரங்களைப் போல இந்த அவதாரத்திற்கு அதிகமான கோயில்கள் இல்லை. தஞ்சாவூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் பண்டாரவாடை என்னும் கிராமம் உள்ளது. அங்கே தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோயிலே மச்ச அவதாரமாக ஸ்ரீ விஷ்ணுவை வழிபடும் வழிபாட்டுத் தலமாக அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பெயர் 'மச்சபுரீஸ்வரர்' என்பதாகும். அம்பாள் திருநாமம் 'சுகந்த குந்தலாம்பிகை.'

இக்கோயில் வரலாற்றின்படி ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மதேவன் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டார். அப்போது ஒரு அசுரன் படைப்புத் தொழிலுக்கு ஆதாரமான வேதங்களை திருடிச் சென்று விட்டான். அதனால் படைப்புத் தொழில் ஸ்தம்பித்துப்போனது. அப்போது பிரம்மதேவன் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீ மஹாவிஷ்ணு அவருக்கு உதவுவதற்கு முன் வந்தார். அவர் சிறிய மீன் வடிவம் எடுத்து ஒரு ஆற்றில் தங்கியிருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் சத்யவிரதன் என்னும் மன்னன் நீரையே உணவாகக் கொண்டு ஸ்ரீ மஹாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் செய்து கொண்டிருந்தான்.  ஒரு நாள் அவன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது தன் இரு கைகளாலும் ஆற்று நீரை அள்ளினான்.  அப்போது அவன் கையில் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் குஞ்சு வந்தது. அந்த மீன் அவனிடம் பேசியது, "மன்னா! என்னை மீண்டும் நீரில் விட்டு விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை விழுங்கி விடும்!" என்றது.

உடனே மன்னன் தனது கமண்டலத்தில் அந்த மீனைப் போட்டுக் கொண்டு அரண்மனைக்குப் போனான். சிறிது நேரத்தில் அந்த மீன் கமண்டலம் கொள்ளாத அளவிற்குப் பெரியதானது. உடனே மன்னன் அந்த மீனை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டான். பாத்திரம் கொள்ளாத அளவிற்கு மீன் பெரிதாகி விடவே, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போன மன்னன் அந்த மீனை அரண்மனையில் இருந்த நீராடும் குளத்தில் விட்டான். அங்கேயும் அது பிரம்மாண்டமாக வளர, மீனை எடுத்துச் சென்று ஊர் குளத்தில் விட்டான். சிறிது நேரத்தில் குளத்தின் பரப்பளவிற்கு சரியாக மீன் வளர்ந்து விட்டது.

மன்னன் சிறிது யோசித்து விட்டு படை வீரர்கள் உதவியோடு அந்த மீனை எடுத்துச் சென்று கடலில் விட்டான். மீன் கடலளவு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்க, இப்போதுதான் மன்னன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் திருவிளையாடல் இது என்று புரிந்தது. மீன் உருவத்திலிருக்கும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி இதற்கான காரணத்தைக் கேட்டான்.

இதையும் படியுங்கள்:
திருவேங்கடவனின் தயை மழை!
மச்சபுரீஸ்வரர் - சுகந்த குந்தலாம்பிகை

அப்போது ஸ்ரீ மஹாவிஷ்ணு, "மன்னா! வருகிற ஏழாம் நாளில் பிரளயம் ஏற்பட்டு உலகமே வெள்ளத்தில் மூழ்கப்போகிறது. அந்த சமயம் பெரிய படகு ஒன்று இங்கே வரும். அதில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒரு ஜோடியை ஏற்றி விடு.  பிரளய வெள்ளத்தில் அந்த படகு மிதக்கும். ஆனால், அது கவிழ்ந்து விடாதவாறு நான் காப்பாற்றுவேன்" என்றார்.

மஹாவிஷ்ணு உரைத்தபடி ஏழாவது நாளில் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது பெரிய படகு ஒன்று அங்கே வந்தது. மன்னனும் உயிர்களைக் காப்பாற்ற அவற்றை படகில் ஏற்றிக்கொண்டு சென்றான். பலத்த காற்றால் படகு நிலை தடுமாறியபோதிலும் மச்ச அவதாரத்தில் தோன்றியிருந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு படகை காத்துச் சென்று பிரளயம் முடிந்ததும் நிலத்தில் விட்டு அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார். பின்னர் பரந்தாமன் கடலுக்குள் சென்று அந்த அசுரனுடன் போரிட்டு அவனை அழித்து வேதங்களை மீட்டு அவற்றை பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார். அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக மச்ச உருவத்திலிருந்து தனது சுய உருவத்தை அடைய முடியவில்லை ஸ்ரீ மஹாவிஷ்ணுவால். அதனால் அவர் இந்தத் திருத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வணங்கினார்.  சிவனருளால் ஸ்ரீ மஹாவிஷ்ணு திரும்பவும் சுய உருவம் அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.

மச்சபுரீஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தலம் என்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து  விளங்க அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது. குலதெய்வ வழிபாடு விட்டுப் போனவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com