திருவேங்கடவனின் தயை மழை!

Tirupati Venkadesa Perumal
Tirupati Venkadesa Perumal

தொடர்ந்து வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மழை வந்து நம்மை குளிர்விக்கும்போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்? நாம் மட்டுமா மகிழ்ந்து போகிறோம்? நம்மைச் சுற்றி இருக்கும் செடிகளையும், கொடிகளையும் ஒரு நிமிடம் பார்த்தால், லேசாக பட்ட மழை துளியில் நனைந்து தம் பசுமைக்கு மேலும் பசுமையை சேர்த்துக்கொண்டு எவ்வளவோ நாட்கள், எவ்வளவோ உரங்கள் போட்டுக்கூட பூக்காத பூக்கள் கூட மழையை கண்ட சந்தோஷத்தில் பூத்து குலுங்குவதை நாம் பல நாட்கள் பார்த்திருப்போம்.

இதன் மூலம் இயற்கை நமக்கு சொல்லித் தரும் பாடம் என்ன தெரியுமா? நாம் செய்த கர்ம வினைகளால் நாம் அவதியுற்று கொண்டிருக்கும்போது நம்மை படைத்தவனின் கருணை எனும் மழை, அந்த தயை மழை ஒரு துளி நம் மீது பட்டுவிட்டால் போதும், வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் என எல்லாம் தானாகவே வர ஆரம்பிக்கும். திருமலையில் நமக்காகக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாசனின் தயை குணத்தை மட்டுமே போற்றி 100 ஸ்லோகங்களைக் கொண்ட, ‘தயா சதகம்’ எனும் ஸ்தோத்திரத்தை அருளி இருக்கிறார் ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன்.

ஸ்ரீனிவாச பெருமாளை நாம் தரிசனம் செய்யும்போது ஒரு விஷயம் நமக்கு நன்றாக புரியும். அவரது திருக்கைகளை பார்க்கும்போதே நமக்கு அப்பெருமாளின் தயை குணம் புரியும். அவரது வலது திருக்கை என்பது அவரது திருவடியை காட்டியபடி இருக்கும். இடது திருக்கையோ, ‘நான் உங்களை என்னோடு சேர்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்வது போலவே இருக்கும். ‘நீங்கள் எவ்வளவு பாவங்கள் செய்தவர்களாக இருந்தாலும் சரி, இதோ என் திருவடியை பற்றிக்கொள்ளுங்கள், நான் உங்களை எம் தயை குணத்தால் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அவரது திருக்கைகளே நமக்குக் காட்டி கொடுக்கிறதல்லவா? என் கருணையை நம்புங்கள். எம் கருணையை பற்றிக்கொளுங்கள் என்று காட்டிக்கொண்டே காட்சி தந்து கொண்டே இருக்கிறான் திருவேங்கடமுடையான். ஆனாலும், நமக்கு அப்பெருமாளின் மிக உயர்ந்த கல்யாண குணமான, தயை குணம் பற்றி தெரியவில்லையே என்பதற்காகவே தேசிகன் பெருமாளின் கருணை குணத்தை மட்டுமே போற்றி அருளி செய்ததே, ‘தயா சதகம்.’

‘காருண்யை காந்திநோ பஜே’ என்று திருவேங்கடவனின் காருண்ய குணத்தை மட்டுமே வணங்கியவர்கள் ஆழ்வார்கள். பெருமாளிடம் இருக்கும் அனைத்து குணங்களுமே தயை எனும் குணம் சொல்வதைத்தான் கேட்குமாம். ஞானம், சக்தி போன்ற குணங்கள் கூட தயை சொன்னால்தான் வெளிப்படும். பெருமாளை அனுபவிப்பதை விட பெருமாளின் குணங்களை அனுபவிப்பதுதான் விசேஷம் என்று வேதம் காண்பித்துக் கொடுத்திருக்கிறது. ‘பெருமாளே, உன்னிடம் இருக்கும் தயா குணத்தால் நீ என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் நான் உன்னை சரணடைகிறேன்’ என்று பெருமாளின் தயா குணத்தை பொருட்டே நாம் சரணடைய வேண்டும் என்றும் சில பெரியோர்கள் அழகாய் கூறுவார்கள்.

திருவேங்கடமுடையானை கரும்பு என்றும், அவனின் அந்த கருணைதான் அந்த கரும்பிலிருந்து வரக்கூடிய சாறு என்றும், அப்படி அந்தக் கரும்பு சாறு ஒன்று சேர்ந்து உருவான சர்க்கரைக் கட்டியாக, கல்கண்டு கட்டியாக திருமலை திகழ்கிறது என்கிறார், ‘தயா சதகத்தின்’ முதல் ஸ்லோகத்தில்.

‘ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸாநுகம்பயா
இக்ஷு ஸார ஸ்ரவந்த்யேவ யந்மூர்த்யா ஷர்க்கராயிதம்’

திருமலையானிடம் இருக்கும் அந்த தயை குணத்தையே, தயா தேவியாகக் கொண்டு தயா சதகத்தில் அருளி இருக்கிறார் தேசிகன்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் கண் திருஷ்டி இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
Tirupati Venkadesa Perumal

நாம் செய்திருக்கும் பாவங்களோ கடலளவை போன்றது. செய்திருக்கும் புண்ணியங்களோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறது. அப்படி நாம் செய்த பாவங்களைப் பார்த்தாலே நாம் மூர்ச்சையாகி விடுவோம் என்று சொல்லும் ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானோடு இருக்கும் தயா தேவியே நீயே முதலில் சஞ்ஜீவினியாய் இருந்து அந்தப் பாவங்களை நீக்க வேண்டும். ‘ஸஞ்ஜீவயது தயே மாம்’ என்று மூர்ச்சையாகி கீழே விழுந்தவரை நீ தான் உயிர் பிழைக்க வைக்க வேண்டும் என்கிறார் 12வது ஸ்லோகத்தில். 13து ஸ்லோகத்தில், ‘பகவதி தயே பவத்யா’ என்று தயா தேவியே, எம் பாவங்கள் எல்லாம் உன் தயையில் மூழ்கி விட்டன என்கிறார் தேசிகன். தயா சாகரத்தில் பாவங்கள் எல்லாம் மூழ்கியே விட்டன.

பிரளய காலத்தில் தொடங்கி நம்மை தொடர்ந்து காத்துக்கொண்டே இருக்கிறாள் தயா தேவி என்று கொண்டாடுகிறார் தேசிகன், தம்முடைய 16 வது ஸ்லோகத்தில். திருவேங்கடமுடையானிடம் இருக்கும் அந்த தயா தேவியை (தயை குணத்தை) நாமும் மனதில் நிறுத்திக்கொள்வோம். தம்முடைய உயர்வான அந்த தயை மழையை நிச்சயம் நம் மீதும் எல்லா நேரமும் பொழிந்துக்கொண்டே இருப்பார் ஏழுமலையான் என்றே உறுதியாக நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com