அபிஜித் முஹூர்த்தம் என்றால் என்னவென்று தெரியுமா?

Do you know what Abhijit Muhurtam is?
Do you know what Abhijit Muhurtam is?https://tamil.oneindia.com

ம் பாரதத் திருநாட்டில் இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகிய 'அயோத்தி ஸ்ரீ ராம் லல்லா கோயில் பிராண பிரதிஷ்டை' அபிஜித் முஹூர்த்தத்தில் நடத்தப்பட்டது. இந்த அபிஜித் முஹூர்த்தத்திற்கு அப்படி என்ன விசேஷம் தெரியுமா?  ஒரு தேசத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஏன் அந்த முஹூர்த்தத்தில் நடத்தப்பட வேண்டும்?

பிரம்ம முஹூர்த்தத்தை எப்படி நாம் நிர்மலமான மிகப் புனிதமான நேரமாகக் கருதுகிறோமோ, அதேபோல் அபிஜித் காலமும் மிகப் புனிதமான வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.  'ஜித்' என்றால் ஜபித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும். அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறு மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம்.

பண்டைய இந்திய வேத நூல்கள் அபிஜித்தை எந்தவொரு மங்களகரமான செயலையும் செய்வதற்கு மிகவும் ஏற்ற நேரமாகக் குறிப்பிடுகின்றன. இதன் தெய்வம் பிரம்மா.  12.00 மணி நேரத்திற்கு 28 நிமிடங்களுக்கு முன்பும் 28 நிமிடங்களுக்கு பின்னும் உள்ள நேரம் (காலை மற்றும் பிற்பகல் இரண்டும்) அபிஜித் முஹூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல உத்திராட நட்சத்திரமும் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்) திருவோணமும் (இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்) இரண்டும் இணையும் காலம் அபிஜித் நட்சத்திர காலம் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றி அடைய  விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் நட்சத்திர காலத்தைப் பயன்படுத்தி வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

ஒரு காலத்தில் மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தனவாம். அதில் அபிஜித் நட்சத்திரமும் ஒன்றாம். ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் இருந்திருக்கின்றன. பிற்பாடு நாழிகை கணக்குப் பிரகாரம் பார்த்ததில் ஒரு  மாதத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டுமே இருக்கக்கூடிய சாத்தியக்கூறு இருந்ததால், நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அபிஜித் நட்சத்திரம் விடுபட்டுப் போனதாம். வம்சோத்திரி தேசா கணிதத்திற்குப் பிறகு நட்சத்திரங்கள்  27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டன. ஆனாலும், அபிஜித் ஒரு கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரமாகவே போற்றப்படுகிறது. இதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுத்து ஒரு நாளில் இருமுறை அபிஜித் காலம் என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டு அது வெற்றிக்குறிய காலமாகவும் குறிக்கப்பட்டது.

புதுத் தொழிலை துவங்க இந்த நேரமானது மிக உன்னதக் காலமாகக் கூறப்படுகிறது. வாழ்வில் எந்த ஒரு செயலிலும் வெற்றிக்கொடி நாட்டிட அந்த செயலை அபிஜித் காலத்தில் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த அபிஜித் காலத்தில்தான் பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமான் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிரிகளை தோற்கடித்து ஓடச் செய்தார்.  இதிலிருந்து இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது அதிலிருந்து விடுபட்டு வெற்றி பெற அபிஜித் காலத்தை பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
அயோத்தி ராமர் கோயில் வீரம் செறிந்த வரலாறு!
Do you know what Abhijit Muhurtam is?

நமக்கு ஏதாவது குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால், அவை விலக அபிஜித் முஹூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற உதவுகின்றன. இந்த காலத்தில் ஜபிக்கப்படும் மங்கள மந்திரங்கள் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் வானில் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளுதல் கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.  ஆனால், இந்த நட்சத்திரத்தைப் பார்த்து விட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com