அமாவாசை காய்கறிகள் என்றால் என்ன தெரியுமா?

Amavasai
Amavasai

அமாவாசை நாளன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா! அப்படித் தெரியவில்லை என்றால் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் வம்சாவளியில் வாழ்ந்த முன்னோர்களுக்கு அமாவாசை நாள்களில் அவர்களுக்கு பிடித்தவற்றை செய்து படைப்பது வழக்கமாகும். இப்படிச் செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் மனம் குளிர்ந்து, நம்மை வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். அமாவாசை நாள்களில் சில குறிப்பிட்ட காய்கறிகளைத் தான் சமைக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அமாவாசை அன்று விரதமிருந்து முன்னோர்களுக்கு படைத்துவிட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை சமையல் மற்றும் தர்ப்பணத்தின் போது அந்தணருக்கு கொடுக்கும் பொருள்களிலும் வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

வாழையடி வாழையாய் நமது குலம் வளர்வதற்கு வாழைக்காயை அமாவாசை சமையலில் பயன்படுத்த வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. இது தவிர்த்து பலாக்காய், பிரண்டை மற்றும் பாகற்காய் ஆகியவற்றையும் சேர்த்து இந்த 4 காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டுமாம். இதனை உணர்த்துவதற்கு புராணத்தில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுகிறது.

1008 காய்கறிகள்:

வசிஷ்ட முனிவர், மன்னராக இருந்து பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்திரரைச் சந்தித்து எங்கள் வீட்டில் சிரார்த்தம் செய்ய இருப்பதால் உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். சிரார்த்தம் என்பது நம் வீட்டில் இறந்த முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஒருவித சடங்காகும். மிகவும் கோபக்காரரான விஸ்வாமித்திரர் தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்ட சமையல் வேண்டும் என்றார். இதனைக் கேட்ட வசிஷ்டர் 1008 காய்கறிகளா என திகைத்து நின்றார்.

வீட்டிற்கு வந்து தனது மனைவி அருந்ததியிடம் இந்தத் தகவலைச் சொன்னார் வசிஷ்டர். 1008 காய்கறிகள் தானே நான் சமைத்துத் தருகிறேன் என்று பொறுமையுடன் பதிலளித்தாள் அருந்ததி. சிரார்த்தம் கொடுக்கும் நாளில் விஸ்வாமித்திரர் வந்ததும், அவருக்கு வாழை இலை வைத்து உணவுகளைப் பரிமாறத் தொடங்கினார். அப்போது எட்டு வாழைக்காய்கள் முதலில் பரிமாறப்பட்டது. அதன் பின் பலாக்காய், பாகற்காய் மற்றும் பிரண்டையைப் பரிமாறி விட்டு, 1008 காய்கறிகளை பரிமாறி விட்டேன்; சாப்பிடத் தொடங்குங்கள் என்றாள் அருந்ததி.

இதையும் படியுங்கள்:
ஆடி அமாவாசை சந்தேகங்கள்... நம்பிக்கைகள்...தெளிவுகள்!
Amavasai

மிகவும் கோபமான விஸ்வாமித்திரர் 4 காய்கறிகளை வைத்து விட்டு, 1008 காய்கறிகள் என்று பொய்யுரைக்கிறாயா என்றார். இதற்கு பொறுமையாக பதிலுரைத்த அருந்ததி, சுவாமி நீங்கள் அறியாதது ஒன்றுமே இல்லை; அனைத்தும் அறிந்த நீங்களே இப்படிச் கோபமடையலாமா! பலாக்காய் 600 காய்கறிகளுக்கும், பிரண்டை 300 காய்கறிகளுக்கும், பாகற்காய் 100 காய்கறிகளுக்கும் சமம் என்று சாஸ்திரமே கூறுகிறது. மேலும் 8 வாழைக்காய்களை வைத்துள்ளேன். ஆக மொத்தம் 1008 காய்கறிகளைப் பரிமாறி விட்டேன் என்று பணிவுடன் சொன்னார் அருந்ததி.

இதனைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்திரர், அருந்ததியின் அறிவுக்கூர்மையையும் மற்றும் சாஸ்திரத்தைப் பின்பற்றி நடக்கும் குணத்தையும் பாராட்டினார். சாப்பிட்டு முடித்த பிறகு, வசிஷ்டர் மற்றும் அருந்ததியை வாழ்த்தி ஆசிர்வதித்தார். இதனால் தான் அமாவாசையின் போது வாழைக்காய், பிரண்டை, பாகற்காய் மற்றும் பலாக்காய் ஆகியவை சமைக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com