நமக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என்பதையே அறியாமல் சில நேரம் செயல்பட்டுக் கொண்டிருப்போம். இதனால் நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய தாமதோ அல்லது தோல்வியோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இதற்கு அடிப்படை பிரச்னையாக இருக்கும் கண் திருஷ்டியை போக்கினால், நிச்சயமாக நாம் செய்யும் செயல்களில் விரைவில் வெற்றியடையலாம்.
கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கும்போது ஒருவருக்குக் கண்டிப்பாக உடல் அசதி இருக்கும். வேலை செய்து வரும் உடல் அசதியில்லாமல், எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலுமே உடல் அசதியோடு இருப்பது, அடிக்கடி கொட்டாவி விடுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்போது கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
நாம் புது ஆடை அணியும்போது அது கிழிந்துபோவது அல்லது நெருப்பு படுவது போன்ற விஷயங்கள் நடப்பதும் கண் திருஷ்டிக்கான அறிகுறிகளாகும். வீட்டில் தொடர்ந்து ஏதேனும் பிரச்னை வருவது, சோகம், இழப்பு, நஷ்டம், பிரிவு இப்படி வரிசையாக வரும் பிரச்னைகள், கணவன் மனைவிக்குள் பிரச்னை, சுப நிகழ்ச்சியில் தடங்கல், உறவினருடன் பகை, மருத்துவச் செலவு, சாப்பிடும் ஆசையேயில்லாமல்போவது, தூக்கமின்மை, எதிர்மறை எண்ணம் போன்றவையும் கண் திருஷ்டிக்கான அறிகுறிகளாகவே சொல்லப்படுகிறது.
சிலருக்குக் காரியம் கைக்கூடி வருவது போல வந்து பிறகு காரியம் கைநழுவி போயிருக்கும். இதற்கும் கண் திருஷ்டியே காரணம். எனவே, இதை சரிசெய்வது எப்படி என்பதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.
திருஷ்டி கழிப்பதற்கு அந்தி சாயும் நேரமே சிறப்பாகும். திருஷ்டி கழிப்பவர்கள் கண்டிப்பாக வயதில் மூத்தவர்களாகவே இருக்க வேண்டும். இளையவர்கள் மூத்தவர்களுக்குக் கட்டாயம் திருஷ்டி கழிக்கக் கூடாது. திருஷ்டி கழிக்கும் நாட்கள் அமாவாசை திதிகள், செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கழிக்கலாம். திருஷ்டி கழிக்கும்போது கட்டாயம் கிழக்கு திசையை பார்த்தவாறு செய்வதே சிறப்பு.
வீட்டிற்கு வெளியே பொம்மை, பூசணி போன்றவற்றைக் கட்டி தொங்க விடும்பொழுது வீட்டிற்கு வருபவரின் பார்வை அதன் மீது திரும்பிவிடும் என்பதற்காக செய்யப்படுகிறது. அடுத்து வீட்டினுள் மீன் தொட்டி வைத்திருப்பது அவசியமாகும். நமக்கு வரும் ஆபத்தை மீன்கள் தன்னிடம் எடுத்துக்கொண்டு நமக்கு அறிகுறிகளை காட்டும் என்று சொல்லப்படுகிறது. கட்டாயம் வீட்டின் வாசலில் உருளியில் நீர்விட்டு பூப்போட்டு வைத்திருக்க வேண்டும். ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களை வைக்கலாம். உப்பு, எலுமிச்சைக்கு திருஷ்டியை இழுத்துக்கொள்ளும் ஆற்றல் உண்டு. எனவே குளிக்கின்ற நீரில் உப்பை சேர்த்து குளிப்பது என்பது திருஷ்டியை போக்கும்.
படிகாரத்தை வைத்து திருஷ்டி கழித்து முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும். எலுமிச்சைக்கு பொதுவாகவே கெட்ட சக்தியை தடுக்கும் ஆற்றல் உண்டு. எலுமிச்சையை ஊசியில் கோர்த்து பச்சை மிளகாயுடன் சேர்த்து வாசலில் கட்டுவது அல்லது இரண்டாக வெட்டி குங்குமம் வைத்து வாசலில் இருபக்கமும் வைப்பது நல்லது. இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கண் திருஷ்டியை போக்கும் பரிகாரங்களை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.