க்ளூடாமைன் (Glutamine) என்பது நமது உடலிலுள்ள முக்கியமான அமினோ அமிலங்களில் ஒன்று. இது தசைகளின் கட்டமைப்பில் உதவக்கூடிய ஒரு வகைப் புரோட்டீன். இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சிதைவுற்ற தசைகளை புதுப்பிக்கவும், அதிகப்படியான அமோனியா கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது. இதை நம் உடலால் உற்பத்தி செய்ய முடியும். நாம் உண்ணும் உணவுகளிலிருந்தும் நாம் இதைப் பெற முடியும். எந்த வகையான உணவுகளில் க்ளூடாமைன் அதிகம் உள்ளது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சீரான செரிமானத்துக்கு உதவக்கூடியதுமான பசலைக் கீரையில் க்ளூடாமைன் அதிகமுள்ளது.
சிக்கனின் இதயப் பகுதியில் க்ளூடாமைன் நிறைய உள்ளது. இது தசைகளைப் புதுப்பிக்கவும் சிறப்பான மெட்டபாலிசம் நடைபெறவும் உதவுகிறது.
புரோபயோடிக்ஸ் நிறைந்த யோகர்டில் க்ளூடாமைன் அதிகமுள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உணவிலுள்ள ஊட்டச் சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்படுவதற்கும் உதவி புரிகிறது.
சால்மன் மீனில் க்ளூடாமைன் உள்ளது. மேலும், இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியம் காக்கவும் இதய இரத்த நாளங்களின் செயல்பாடுகளை சிறப்பாக்கவும் உதவுகின்றன.
முட்டையிலுள்ள க்ளூடாமைன் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
க்ரூஸிஃபெரஸ் காய்கறியான முட்டைக்கோஸில் அதிகளவு க்ளூடாமைன் உள்ளது. இது நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
காட்டேஜ் சீஸில் க்ளூடாமைன் மற்றும் கேசீன் (Casein) என்ற புரோட்டீனும் உள்ளன. இவை சிதைவுற்ற தசைகளின் திசுக்களைப் புதுப்பிக்கவும் எடைப் பராமரிப்பிற்கும் உதவி புரிகின்றன.
பாரம்பரிய தானியமான குயினோவாவில் க்ளூடாமைன் அதிகம் நிறைந்துள்ளது. திசுக்களைப் புதுப்பிப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
மேலே கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நம் உடல் தசை ஆரோக்கியம் காப்போம்.