உலகில் எத்தனையோ இடமிருக்கையில் சிவபெருமான் ஏன் சுடுகாட்டுக்குக் காவல் இருக்கிறார் தெரியுமா? அதன் உள்ளிருக்கும் ஆழமான அர்த்தம் என்னவென்பதை எப்போதாவது உணர்ந்ததுண்டா? அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஒரு சமயம் பார்வதி தேவிக்கும் இதே கேள்வி எழுந்தது. அதை சிவபெருமானிடமே கேட்கிறார். ‘இந்த பூமியில் எவ்வளவோ இடமிருக்கையில், நீங்கள் சுடுகாட்டில் தங்குவதற்கான காரணம் என்ன’வென்று கேட்கிறார். அதற்கு சிவபெருமான் சொல்கிறார், ‘எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வரக்கூடிய ஒரே இடம் சுடுகாடுதான். தான் உயிருடன் இருக்கும்போது கடவுளிடம் வந்து உண்மையான அன்போடு யாரும் வேண்டுவதில்லை. எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்றுதான் வேண்டுகிறார்கள்.
அவர்கள் இறந்த பிறகு அவர்களை நினைத்து உறவினர்கள் சிறிது காலமே கவலைப்படுவார்கள். பிறகு அந்த நபர் சேர்த்து வைத்த சொத்து, சுகங்களைத் தேடிப் போக ஆரம்பித்து விடுவார்கள். அப்போதுதான் அந்த ஆன்மா உணரும், ‘வாழ்நாள் முழுவதும் செல்வத்தை நோக்கி ஓடி வீணடித்துவிட்டோம். மோட்சத்துக்கான புண்ணிய பலனை சேர்த்து வைக்காமலேயே விட்டுவிட்டோம்’ என்று அந்த ஆன்மா கலங்கி தனியாக நிற்கும்.
ஆனால், நான் அந்த ஆன்மாவை தனியாக விடமாட்டேன். மயான பூமியிலே அந்த ஆன்மாவிற்கு துணையாக இருப்பேன். நீ தனியாக இல்லை என்று ஆறுதல் தருவதற்காகவும், அந்த ஆன்மாவிற்கு முக்தி தருவதற்காகவும்தான் நான் ருத்ர பூமியில் இருக்கிறேன். இந்த ஜகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் நானே தந்தையாக இருக்கிறேன்.
எனவே, ஒரு தந்தையாக காயம் அடைந்து வலியால் துடிக்கும் குழந்தைக்கு என்னை அடைய உதவுவது எனது கடமையாகும். அதனால்தான் நான் ருத்ரபூமியிலே தங்கி அங்கே தவிக்கும் ஆன்மாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்’ என்று சிவபெருமான் கூறினார்.
சிவபெருமானின் ஒவ்வொரு ரூபத்திற்கும், ஒவ்வொரு அவதாரத்திற்கும் பின்பும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் சுடுகாட்டில் வாசம் செய்வதற்கும், சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்வதற்கும் ஆழமான காரணங்கள் இருக்கின்றன. அதை நாம் தெளிவாக உணர்ந்துக்கொண்டால், செல்வத்தின் மீதானப் பற்று தானாகவே அழிந்து சிவபெருமானின் மீதானப் பற்று அதிகரித்துவிடும்.