உடலுக்கு ஆரோக்கியம் தருவதும், விலை அதிகமுள்ளதுமான சீதா பழத்துக்கும் ஸ்ரீராமரின் துணைவியார் சீதா தேவிக்கும் தொடர்பு இருக்கிறது என்பதைக் கூறும் ஒரு வரலாற்றுக் கதை கூறப்படுகிறது. ஸ்ரீராமர், தனது மனைவி சீதா தேவியுடனும், தம்பி லட்சுமணனுடனும் வனவாசம் இருந்தபோது சீதையை, லட்சுமணனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு காட்டில் விறகு எடுத்து வரச் சென்றாராம்.
நீண்ட நேரமாகியும் ஸ்ரீராமர் திரும்பாததால் அவரைத் தேடி லட்சுமணனும் காட்டுக்குள் சென்றான். அவனும் திரும்பாததால் இருவரையும் தேடி சீதா தேவி அழுதுகொண்டே காட்டுக்குள் சென்றாராம். அப்போது சீதையின் கண்ணீர்த் துளிகள் ஆங்காங்கே சிந்தியதாம். இறுதியில் ஸ்ரீராமரைக் கண்ட சீதை அவரை ஆரத்தழுவிக் கொண்டாராம். நீண்ட தொலைவு நடந்து வந்த சீதைக்கு மிகவும் களைப்பாக இருந்ததால் ஸ்ரீராமர் தனது தோளில் சீதையை சுமந்து நடந்தாராம். இதனால் உடல் முழுதும் வியர்த்து ராமபிரானின் வியர்வைத் துளிகளும் ஆங்காங்கே சிந்தியதாம்.
சீதையின் கண்ணீர்த் துளிகள் சிந்திய இடத்திலும், ஸ்ரீராமரின் வியர்வைத் துளிகள் சிந்திய இடத்திலும் செடிகள் முளைத்து விருட்சமாகி காய்கள் காய்த்து பசுமையாக இருந்ததாம். இதைக் கண்ட ஸ்ரீராமர் ஒரு மரத்திற்கு, ‘சீதா மரம்’ என்றும், சீதா தேவி ஒரு மரத்திற்கு ‘ராம மரம்’ என்று பெயர் வைத்தார்களாம். இவையே தற்போது சீதா மரம் என்றும் ராம் சீதா மரம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சீதா பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. சீதளம் என்றால் குளிர்ச்சி. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழம் என்பதால் இது ஆரம்பத்தில், ‘சீதளப்பழம்’ என்று கூறப்பட்டு பிறகு இப்பெயரே மருவி ‘சீதா பழம்’ என்று ஆனதாகவும் கூறப்படுகின்றது.
சீதா பழத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இதை பெண்கள் சாப்பிட்டால் இரும்புச் சத்து அதிகரித்து உடல் வலிமை பெறும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளுக்கு உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உண்டு. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும், இது மன அழுத்தத்தை நீங்குவதாகவும் கூறப்படுகிறது. சீதா பழம் செரிமான சக்தியைத் தூண்டுவதோடு, பேதி, வாந்தி போன்ற உடல் பிரச்னைகளையும் போக்குகிறது.
ஆரோக்கிய சத்துக்கள் பல நிறைந்த சீதா பழத்தை இந்தக் கோடைக்காலத்தில் சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக பெறலாமே?