
நம்மில் பல பேர் தான் மட்டுமே நல்ல அறிவாளி என எண்ணிப் பேசுவதும், செயல்படுவதுமாக இருப்பார்கள். ஆனால், எண்ணினால் மட்டும் போதாது. ஒரு செயலில் முன்னேற்றம் காண, சுற்றுப்புறச் சூழ்நிலையையும், நேரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர, அதில் அலட்சியப் போக்கு கூடாது. இவற்றை உணர்ந்து செயல்படுபவரே நல்ல அறிவாளி.
துரோண மகரிஷியிடம், பஞ்சபாண்டவர்களும், கௌரவர்கள் நூறு பேர்களும் வில் வித்தை கற்று வந்தனர். எந்தவிதமான பாகுபாடும் இன்றி, துரோணர் அனைவருக்கும் வித்தைகளைக் கற்றுக் கொடுத்தாலும், நல்ல மனமில்லாத துரியோதனனுக்கு இதில் ஒப்புதல் இல்லை.
அவன் பீஷ்மரிடம் சென்று, "தாத்தா! துரோணர், பாண்டவர்களுக்கு அதிலும் அர்ஜுனனுக்கு சற்று விசேஷமாக பாடம் நடத்துகிறார். இது சரியில்லை. நானும் நல்ல அறிவாளிதான். தாங்கள் வந்து துரோணரிடம் நியாயம் கேளுங்கள்"என்றான்.
இதை ஒப்புக்கொள்ளாத பீஷ்மர், துரியோதனனுக்கு, அநேக புத்திமதிகள் கூறியும், அவன் காது கொடுத்துக் கேட்காமல், பீஷ்மரை வலுக்கட்டாயமாக கூட்டிக்கொண்டு, துரோணரிடம் சென்றான்.
துரியோதனனுடன் வந்த பீஷ்மரை எதிர்பாராமல் கண்டு ஆச்சரியப்பட்ட துரோணர், அவரை வரவேற்று உபசரித்தார். பின்னர் பீஷ்மரின் வருகைக்குக் காரணம் கேட்கையில், பீஷ்மரும் எப்படியோ ஒருவகையாக சுற்றி வளைத்து தன்னுடைய வருகையின் காரணத்தை தெரிவித்தார்.
"துரோணருக்கு, துரியோதனனின் குறுகிய மனம் புரிந்தது. ஒன்றும் பேசவில்லை. சற்று நேரம் சென்றது. "பீஷ்மரே! வாருங்கள். நாம் எல்லோரும் நதியில் குளித்துவிட்டு வரலாம். வந்தவுடன், உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும். துரியோதனனுக்கு புரியாவிட்டாலும், உண்மை உங்களுக்குப் புரியும். வாருங்கள். போகலாம்" என்று துரோணர் கூறியதும், கௌரவர்களும், பாண்டவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
சிறிது தூரம் சென்ற பின் துரோணர், அர்ஜுனனைக் கூப்பிட்டு, "எண்ணெய் கிண்ணத்தை குடிலில் மறந்து வைத்துவிட்டேன். போய் எடுத்து வா" என்றவுடன், அர்ஜுனன் உடனே சென்றான். மற்றவர்கள் மேலே தொடர்ந்து செல்கையில் பிரம்மாண்டமான ஒரு ஆலமரத்தைக் காண துரோணரும், பீஷ்மரும் அம்மரத்தடியில் அமர்ந்தனர். மாணவர்கள் அவர்கள் முன்னே மரியாதையாக நின்றனர்.
அப்போது துரோணர் ஒரு மந்திரத்தை எழுதி, "மாணவர்களே! இதை மனதில் பதிய வைத்து ஆலமரத்தின் மீது ஒரு அம்பு விட்டால் அனைத்து இலைகளிலும் ஒரு ஓட்டை விழும். இது ஒரு அபூர்வமான வித்தை!" என்றார். உடனே துரியோதனன் முன்வந்து மந்திரத்தை படித்து அம்பு எய்ய, எல்லா இலைகளிலும் ஒரு ஓட்டை விழ, அனைவரும் கைதட்டினார்கள். இதனால் பெருமைப்பட்ட துரியோதனன், தனக்கு மட்டுமே தெரிந்த இவ்வித்தை, எண்ணெய் எடுக்கச் சென்றிருக்கும் அர்ஜுனனுக்குத் தெரியாது என்றெண்ணி மகிழ்ந்தான்.
அனைவரும் நீராடச் சென்றனர். அர்ஜுனனும் வந்து சேர, நீராடித் திரும்பி அதே ஆலமரத்தடியில் வந்து தங்கினர். அப்போது, எல்லா இலைகளிலும் இரண்டாவது ஓட்டையைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். துரியோதனனுக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி.
துரோணரையும் பீஷ்மரையும் வணங்கிய அர்ஜுனன், “இரண்டாவது ஓட்டையை உண்டாக்கியவன் நான்தான்” என்றான்.
உடனே துரோணர், "அர்ஜுனா! உனக்கு இந்த வித்தை தெரியாதே. நான் கற்றுக்கொடுக்கையில், நீ இங்கு இல்லையே! அப்புறம் எப்படி?" என்றார்.
"நான் எண்ணெயுடன் திரும்பி வருகையில், ஆலமரத்தடியில் நிறைய பேர்களின் காலடி சுவடுகளையும், தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும், இலைகளில் ஒரு ஓட்டையையும் கண்டேன். அம்மந்திரத்தைப் படித்துவிட்டு நானும் அம்பை எய்ய, இரண்டாவது ஓட்டை விழுந்தது. பிறகுதான் நீராட வந்தேன் குருநாதரே!" என்றான் அர்ஜுனன்.
துரியோதனனின் முகம் மாறியதைக் கண்ட துரோணர், "நீயும் அம்பெய்து மூன்றாவதாக துவாரம் போடு" என்றதும், துரியோதனன் கீழே மந்திரத்தைத் தேடினான்.
"துரியோதனா! அந்த மந்திரத்தை என் மனதில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டு, அதை அழித்து விட்டேன்" என்றான் அர்ஜுனன். துரியோதனன் தலை குனிந்தான்.
“பீஷ்மரே! தாங்களே எல்லாவற்றையும் பார்த்து விட்டீர்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் கற்றுக்கொடுக்கிறேன். தான் ஒரு பெரிய அறிவாளியென நினைக்கும் துரியோதனன், தன்னுடைய அலட்சியப்போக்கினால், மந்திரத்தை மனதில் பதிய வைக்கவில்லை. ஆனால், அர்ஜுனனோ எண்ணெய் கொண்டு வரும் நேரத்தில், சுற்றுப்புறச் சூழலை ஆராய்ந்து புது வித்தையை கற்றுக் கொண்டான். மந்திரத்தையும் மனதில் பதிய வைத்துக் கொண்டான். தப்பு என்னுடையதா? சொல்லுங்கள்" எனக் கேட்ட, துரோணரிடம், ‘இல்லை’யெனத் தலையசைத்து விடை பெற்றார் பீஷ்மர்.