
ஒரு ஆலயம் எழும்புவதற்கு முன்பு அந்த இடத்தின் அதன் மூல வழிபாடு ஒரு மரத்தின் கீழிருந்துதான் தொடங்கப்படுகிறது. எந்த மரத்தின் கீழிருந்து அவ்வழிபாடு தொடங்கப்படுகிறதோ அந்த மரம் அக்கோயில் தல மரமாக சிறப்புப் பெறுகின்றது. அந்தத் தல விருட்சத்திற்கு தனி வழிபாடு செய்தல் நமது இறை பக்தியின் சின்னமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், சில ஆலயங்களையும் அவற்றின் அபூர்வ தல விருட்சங்கள் குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சேறை. இங்குள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் அபூர்வமான மாவிலங்கை மரம் தல விருட்சமாக உள்ளது. ஆண்டின் 4 மாதத்தில் மரம் முழுவதும் இலைகளையும், அடுத்த 4 மாதத்தில் மரம் முழுவதும் வெள்ளை நிற பூக்களையும், அடுத்த 4 மாதங்கள் பூ, இலை எதுவுமில்லாமல் மரம் காணப்படுவது விநோதம்.
திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே உள்ள வேலூர் கிராமத்தில் உள்ளது பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோயில்! இந்த ஆலயத்தின் புஷ்கரணி அருகில் தல விருட்சமாக அரசமரம் உள்ளது. இந்த அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், கிளை மற்றும் இதரப் பகுதிகளில் சிவனும் வீற்றிருப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகள் இம்மரத்தில் வாசம் செய்வதால் இந்த தல விருட்சத்தை வணங்கினால் நீண்ட ஆயுளுடன், செல்வமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த மரத்தை சனிக்கிழமை மட்டுமே தொட அனுமதி உண்டு.
காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் திருமாகறல் எனும் ஊர் உள்ளது. இங்குள்ளது திருமாகறலீஸ்வர் ஆலயம். இத்தலத்தை காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அடையலாம். இங்கு தல விருட்சமாக இருப்பது எலுமிச்சை மரம். வேறு எந்த சிவன் கோயிலிலும் இல்லாதது இது.
வால்மிளகு மிகுந்த மருத்துவ குணம் கொண்டது என்பது பலருக்குத் தெரியும். அந்த வால்மிளகு கொடி ஒரு கோயிலின் தல விருட்சம். தொண்டை நாட்டில் உள்ள தக்கோலத்தில் உள்ள தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில்தான் அது. இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம். இது வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் திருவடியிலிருந்து நீர் ஊறுவதால் திருஊறல் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தல கோயிலின் தல விருட்சம் வால்மிளகு. இந்தக் கொடி மரத்தில் படர விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் பூம்புகாருக்கு அருகில் உள்ளது ‘சாயாவனம்' என்கிற ‘திருசாய்க்காடு' கிராமம். இவ்வூரில், ஸ்ரீ குயிலினும் இன்மொழியம்மை உடனுறை ஸ்ரீரத்தின சாயாவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரைப் புல். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகிறது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம் திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயில் கடலூர் இரயில் நிலையம் அருகே உள்ளது. இக்கோயில் தல மரம் பாதிரி மரம். இதன் பூ நல்ல வாசமுள்ளது. இது சித்திரை, வைகாசியில் மட்டுமே பூக்கும்.
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் ஊருக்கு மேற்கே அத்ரிபரமேஸ்வரர் கோயில் மலை மீது உள்ளது. இங்கே ருத்ர விநாயகர் சன்னிதிக்கு பின்புறம் நெடிதுயர்ந்து நிற்கிறது இத்தல ‘அமிருதவர்ஷிணி’ மரம். சித்திரை மாதம் இதன் கிளைகளில் இருந்து பன்னீர் துளிகள் போல தண்ணீர் கொட்டுவது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், பங்குனி மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும், அமிர்தவர்ஷினி எனப்படும் மரத்திலிருந்து பன்னீர் மழை பொழியும் அதிசய நிகழ்வு நிகழ்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பாறை மீது இக்கோயில் தல விருட்சமான அத்திமரம் உள்ளது. மிகப் பழைமையான இம்மரத்தில் புதிய இலைகள் முளைப்பதில்லை என்பது ஆச்சரியமானது. இந்தத் திருக்கோயிலில் சிவபெருமான் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து வருகிறார்.
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள ஊர் திடியன். இங்குள்ளது கைலாசநாதர் கோயில். இந்தக் கோயிலின் தல விருட்சம் ‘நெய் கேட்டான் மரம்.’ இம்மரத்தின் இலைகளைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. கீழே உதிர்ந்து விழும் இலைகளை எடுத்து மீண்டும் மரத்தின் மீது போட்டு பக்தர்கள் இலை அபிஷேகம் செய்கிறார்கள். இதனால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்கே கட்டை விரல் சித்தர்கள் பௌர்ணமியில் வந்து ஆசி வழங்குவதாக நம்பிக்கை.