
கலி யுகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், ‘மனிதர்கள் யாரையும் மணக்க மாட்டேன், பெருமாளையே மணப்பேன்’ என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய பாவை நோன்பை மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த பெருமாளின் சன்னிதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து, ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ எனத் துவங்கி, ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை’ என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள் கோதை நாச்சியார். அதுவே திருப்பாவை ஆயிற்று.
‘திரு’ என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.
முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது.
ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக் கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.
இந்தப் பாடல்களில், அக்காலத்தில் மார்கழி மாதத்தில் காலை நேரப் பணிகள் எப்படி இருந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு பெருமாளை கெஞ்சும் ஆண்டாளின் மனநிலை புரிகிறது.