

இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பவர்களை ‘திரிசங்கு நிலையினர்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது ஏன் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய குலத்து அரசர் திரிசங்கு தனது உடம்போடு சொர்க்கம் போக விரும்பினார். அவரது குல குருவான வசிஷ்டரிடம் சென்று அதற்கு உண்டானவற்றைச் செய்யச் சொல்ல வசிஷ்டரோ, ‘அது சுலபமல்ல. நடக்காது’ என்று அறிவுரை கூறினார். இதனால் வசிஷ்டர் மீது கோபம் கொண்ட திரிசங்கு அவரை அவமானப்படுத்தி சாபம் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்பு திரிசங்கு விசுவாமித்திரரிடம் போய் நடந்ததைச் சொல்ல, அவர் தனது தவ சக்தியால் திரிசங்குவை உடலோடு சொர்க்கத்திற்கு அனுப்பினார். ‘இது சரியல்ல, முறையற்ற செயல்’ என்று சொல்லி தேவர்கள் திரிசங்குவை கீழே தள்ளினர். திரிசங்கு அலறியபடியே கீழே விழ, கோபம் கொண்ட விஸ்வாமித்திரர், அவரை அப்படியே ஆகாயத்தில் தடுத்து நிறுத்தி ஒரு புது சொர்க்கத்தை படைக்க ஆரம்பிக்கிறார்.
இதனால் பயந்துபோன தேவர்கள், அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டு, அந்த சொர்க்க நிர்மாணம் ஆனவரை அப்படியே விட்டுவிட கெஞ்சுகிறார்கள். அந்த சொர்க்கம்தான் திரிசங்கு சொர்க்கம். அதாவது பூமியும் இல்லை, சொர்க்கமும் இல்லை என்ற இடைப்பட்ட நிலை. அதுதான் 'திரிசங்கு சொர்க்கம்' என்று அழைக்கப்படுகிறது. மேலுலகமும் இல்லாமல் கீழுலகமும் இல்லாமல் அந்தரத்தில் எந்தவிதமான உதவியும் இல்லாமல் இருப்பதுதான் திரிசங்கு சொர்க்கம் என்பது.
ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட நிலையை குறிக்க உபயோகப்படுத்தும் சொல்தான் ‘திரிசங்கு நிலை’ என்பது. இரண்டு விஷயங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் தடுமாறும் நிலையை குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
திரிசங்கு சொர்க்கம் என்பது அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை. அதாவது, இரண்டுங்கெட்டான் நிலை. இரு பக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை என்பதை குறிக்கும் வகையில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் இரு வேறு வாய்ப்புகளையும் இழந்து தவிப்பது, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவது, இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட நிலையை குறிக்கும் சொல்லாக இன்று வரை இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.