கடவுளைக் காண உதவும் இருநிலைக் கண்ணாடிகள் எவை தெரியுமா?

Guru sidan
Guru sidanhttps://www.vallamai.com

னைவருக்குமே, ‘ஒருமுறையாவது கடவுளைக் காண மாட்டோமோ’ என்கிற ஆவலும் விருப்பமும் இருக்கும். கடவுளை நம்மால் காண என்ன தேவை? தொடர்ந்து இந்தப் பதிவைப் படித்து தெரிந்து கொள்வோம்.

அந்தப் பெரியவர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து கடவுளை தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துடுக்கான மாணவன் ஒருவன் அவரிடம், "ஐயா ஏன் அமர்ந்து கொண்டே தூங்குகிறீர்கள்? சுகமாக படுத்து தூங்குங்களேன்" என்று கிண்டலாக கூறினான். பெரியவர், "தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை நினைத்து தியானத்தில் இருக்கிறேன்" என்றார்.

உடனே அந்த மாணவன், “ஐயா நான் படித்தவன். என்னிடம் விளையாடாதீர்கள். நான் முட்டாள் அல்ல. கடவுள் கடவுள் என்று கூறுவது மகா மூடத்தனம். கடவுளை நீங்கள் எப்பொழுதாவது பார்த்து இருக்கிறீர்களா? என்று கோபத்தோடு வாதம் செய்ய ஆரம்பித்தான்.

அந்த மாணவனின் அகந்தையை பெரியவர் தெரிந்து கொண்டு, ‘இவனை எப்படியாவது மடக்க வேண்டும்’ என நினைத்து, "தம்பி கடவுளை காண முடியாது. உணர மட்டுமே முடியும்" என்றார்.

"என்னது? உணர்வீரா? அப்படி எனில் நீங்கள் கடவுளை கையால் தீண்டி இருக்கிறீர்களா? இது என்ன மூடநம்பிக்கை? காண முடியாத ஒன்று இருப்பதாக கற்பனை செய்து கொண்டு உங்களுடைய நேரத்தைதான் வீணடிக்கிறீர். கடவுள் என்பவர் சிவப்பா கருப்பா?" என்றெல்லாம் வாதிட ஆரம்பித்தான்.

பெரியவர், ‘இந்த முட்டாளிடம் பேசுவது வீண்’ என்று அமைதி காத்தார். இறுதியில் அவன், "சரி பெரியவரே, எனக்கு பசிக்கிறது செல்கிறேன். நீங்கள் கடவுளை கட்டிப்பிடித்து பசியுடன் இருங்கள்" என்று நகர முயன்றான்.

பெரியவருக்கு பொறி தட்டியது. "நில் தம்பி. வயிற்றில் பசி என்றாயே அதை கண்ணாலே பார்த்திருக்கிறாயா?" என்றார்.

"அதெப்படி பசியைப் போய் பார்க்க முடியும் ஐயா?" என்றான்.

"என்ன தம்பி உன்னை முட்டாள் இல்லை என்று சொல்கிறாய். ஆனால் பசியை கண்ணால் கண்டதில்லை, கையால் தொட்டதில்லை என்கிறாய். அப்படி இருக்க, அதை எப்படி நம்புவது? பசி பசி என்று சொல்லி உலகத்தை ஏமாற்றுகின்றாய் நீ. பசி என்ற ஒன்று இல்லவே இல்லை" அதிரடியாக பேசிய பெரியவர் பிறகு அந்த மாணவனின் வயதை எண்ணி தன்மையாக பேச ஆரம்பித்தார்.

"இப்போது புரிகிறதா? பசி உணரக்கூடிய ஒரு அனுபவப் பொருள். அது கண்ணால் காணக்கூடியது அன்று. அதுபோலதான் கடவுளும் அனுபவப் பொருள். அவரை தவம் செய்து மெய்யானவரினால் மட்டுமே உணர்தல் முடியும்" என்று முடித்தார் பெரியவர்.

பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை அறிந்தான் மாணவன். "என் அறியாமையை உணர்கிறேன். இருந்தாலும் ஒரு சந்தேகம். கடவுளை தன்னுள்ளே காண முடியுமா?" எனக் கேட்டான்.

"பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி. உன்னுடைய இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா சொல்."

"என்ன ஐயா, என் உடலை என்னால் பார்க்க முடியாதா? நான் பிறந்ததிலிருந்து என் உடம்பை பார்த்துதானே வருகிறேன்" என்றான்.

"சரி தம்பி, ஆனால் இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகிறதா?"

"நன்றாகத் தெரிகிறதே."

"அவசரப்படாதே. உன் உடலின் பின்புறம் உனக்குத் தெரியுமா?

மாணவன் விழித்தான்.

"பின்புறமாக எப்படிப் பார்க்க முடியும்?"

"சரி அது போகட்டும். உன்னுடைய முன் பகுதியிலாவது எல்லா பகுதிகளையும் உன்னால் பார்க்க முடிகிறதா? முன்புறத்தில் முக்கியமான முகம் உனக்குத் தெரிகின்றதா?" என்று கேட்க, மாணவன் துடுக்குற்று தலை குனிந்தான்.

பிறகு தணிந்த குரலில், "ஐயா முகம் தெரியவில்லைதான்" என ஒப்புக் கொண்டான்.

இதையும் படியுங்கள்:
தமிழரின் தொன்மையான தற்காப்புக்கலை: ஒரு பார்வை!
Guru sidan

"குழந்தாய் உன் உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்பக்க முகம் தெரியவில்லை. உடம்பில் சிறு பகுதியை மட்டும் பார்த்துவிட்டு, ‘கண்டேன் கண்டேன்’ என்று உளறுகிறாய். போகட்டும் இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் சொல்?" என்றார்.

"ஐயா, இரு நிலைக்கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பின் இரு புறங்களும் தெரியும்."

"தம்பி, உன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி இறையருள். மற்றொன்று குருவருள். அந்த இறையருள், குருவருள் எனும் இரு கண்ணாடிகள் இருந்தாலும் எல்லோராலும் கடவுளைப் பார்க்க முடிவதில்லை. அவரவர் பாவ புண்ணியத்தின்படியே ஞானமே வடிவான இறைவனைக் காண முடியும். தம்பி இறையருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். அந்த குருவைத் தேடி வெளியே அலையாதே உன்னுள்ளே தேடு. உன்னில் உறையும் இறைவனே குருவாக இருந்து உன்னை வழி நடத்துவார். அந்த குருவின் சொல்லுக்கு விரோதம் இல்லாமல் நீ நடக்க ஆரம்பித்தால் ஒரு நாள் உன்னாலும் கடவுளை உணர முடியும்" என்று முடித்தார்.

அந்த மாணவன் தலைக்கனம் முற்றிலும் அழிந்தவனாக கடவுளைக் காட்டும் இரு கண்ணாடிகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com