இதுவரை பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் அனைத்துமே அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே இருக்கும். அதுபோலவே கலியுகத்தில் விஷ்ணு பகவான் எடுக்கப்போகும் 10வது அவதாரம்தான் கல்கி அவதாரமாகும். இந்த அவதாரத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
கல்கி அவதரிக்கப்போவதை பற்றி கல்கி புராணம், விஷ்ணு புராணம் மட்டுமில்லாமல் புத்த மதம், திபெத்திய மதம், கிருஸ்தவ மதம் என்று எல்லா மதங்களும் தர்மத்தை நிலைநாட்ட பிறக்கப்போகும் ஒரு அவதாரத்தை பற்றி கூறுகிறது.
முதலில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற வற்றாத ஜீவநதிகள் வற்றிப்போகும். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகத்தொடங்கும். பூமி வெப்பமயமாகும். புது புது நோய்கள் மனிதனை தாக்கும். மனிதனின் ஆயுட்காலம் 30 வயதுகளிலேயே முடிந்துவிடும். சுயநலம், சோம்பேறித்தனம், மூர்க்கத்தனம் மனிதர்களிடையே மேலோங்கி காணப்படும். இப்படிப்பட்டவர்களை ஆட்சி புரியும் மன்னர்கள் மக்களை சுரண்டுபவர்களாக இருப்பார்கள். அவர்களையே ஆட்சி புரிபவர்களாக வணிகர்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசத்தை இழக்க ஆரம்பிக்கும். உலகத்தை இருள் மூழ்கடிக்க ஆரமிக்கும். நிலவும், சூரியனும் கண்களுக்கு ஒரே நேரத்தில் தெரியும். அதிலும் நிலவு சிவப்பு நிறத்தில் கொழுந்துவிட்டு எரியும். அப்போது முக்கடல் சங்கமிக்கும் இடத்திலே கல்கி அவதாரம் பிறக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
முக்கடல் சங்கமமாகும் இடம் தென்னிந்தியாவாகும். 'சாம்பலா' என்னும் இடத்தில் தன் கல்கி அவதாரம் பிறக்கப்போகிறது என்று கூறப்படுகிறது. சாம்பலாவில் பிறக்கும் கல்கி பிறவியிலேயே கோபக்காரராக இருப்பாராம். பரசுராமரும், அனுமரும் இவருக்கு பல போர்க்கலைகளை கற்றுத்தருவார்கள். கல்கி அசுர பலத்தை அடைந்ததும் வெள்ளை குதிரை மீது அமர்ந்துகொண்டு கையில் வாள் வைத்துக்கொண்டு மொத்த உலகையும் வலம் வருவார். அப்படி அவர் உலகை வலம் வந்து முடிக்கும்போது தீயவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டிருப்பார்கள். எனினும் கல்கி அவதாரம் அழிப்பதற்காகவேயாகும்.
கலியுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சத்திய யுகம் தொடங்கப்படும். மறுபடியும் அனைத்தும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். புராணங்கள் படி கலியுகம் முடிவு பெறுவதற்கு இன்னும் 4,26,000 வருடங்கள் இருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த கணிப்பில் பாதி எப்போதோ நடந்து முடிந்துவிட்டது. உறவுகளுக்குள் பொறாமை, ஏமாற்று, பொய்கள். ஆட்சியில் மக்களை ஏமாற்றுவது, ஊழல் செய்வது, உலகத்தின் பொருளாதாரத்தை பிஸ்னஸ்மென் முடிவு செய்வது, ஆரோக்கியமான உணவு இல்லாமல் நோய் வந்து இறப்பது, பூமியின் வெப்பம் அதிகரித்தல் போன்று யாரோ எப்போதோ சொல்லி வைத்த கணிப்பு அப்படியே இப்போது நடக்கிறது என்றால், அதில் சொல்லப்பட்டிருப்பது போல கல்கி அவதாரமும் உலகில் பிறப்பெடுக்குமா? அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.