ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநதக் கல்லில் வடிக்கப்பட்ட நடராஜர் திருச்சியை அடுத்த பாடலூரில் திரு ஊட்டத்தூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று ஐந்து வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்ச நதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளியால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்புப் பெறுகின்றன. சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இந்த நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இவர் பஞ்சநதன நடராஜர் என அழைக்கப்படுகிறார்.
இந்தக் கோயிலில் இறைவி பெயர் சிவகாம சுந்தரி. சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல், ரசனைக்குரியதாகவும் இருக்கிறது. அன்னை தனது முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பது போல் காட்சி அளிக்கிறார். இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
இந்தக் கோயில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேஸ்வரர் என்ற மேட்டுக் கோயில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு ராஜராஜ சோழரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு. ஒரு சமயம் அவரது வருகையொட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்தத் தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராதவிதமாக இரத்தம் பீறிட்டு எழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது இரத்தம் பீறிடுவது நின்று தடைபட்டு தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சி அளித்தது. அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோயில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது ஊட்டத்தூர் அருள்மிகு சுந்தரனேஸ்வரர் திருக்கோயிலாகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும்.
ஆசிய கண்டத்திலேயே அபூர்வ பஞ்சநதன நடராஜர் அருள்பாலிப்பது இத்திருக்கோயிலில்தான். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்கக்கூடியவர் இந்த நடராஜர். சுமார் ஒரு கிலோ வெட்டிவேரினை 48 துண்டுகளாக எடுத்துக்கொண்டு அவற்றை ஒரு மாலையாகக் கட்டி இந்த நடராஜருக்கு சாத்தி அர்ச்சனை செய்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரக நோய் தீர்வது உறுதி. சிறுநீரகக் கல் தொடர்பான எல்லா நோய்களும் இதனால் குணமாகிறது.
இத்தலத்தில் நந்தி தேவர் கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கபத்திரை ஆகிய நதிகளில் தங்களில் யார் பெரியவர் என்ற தகராறு ஏற்பட்டு, இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவபெருமான் நந்தி தேவருக்கு கட்டளையிட்டார். அதன்படி நந்தி தேவர் ஏழு நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்திருந்ததாகவும் அப்போது கங்கை மட்டுமே வெளியே வந்ததாகவும் கதைகள் கூறுகின்றன. இந்தக் கோயில் அருகில் ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் திருச்சியை அடுத்து பாடலூரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.