பஞ்ச பாண்டவர்களில் இரண்டாமவன் பீமன். இவனது மனைவிதான் இடும்பி. அசுர குலத்தைச் சேர்ந்த இவள், பீமனின் மீது தூய அன்பும் காதலும் கொண்டவள். இவள் மூலமாக பிறந்த கடோத்கஜன் குருக்ஷேத்திர போரில் பாண்டவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தவன். அசுர குலத்தைச் சேர்ந்த இடும்பிக்கும் ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபாடு செய்கின்றனர். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வட இந்தியாவின் இமாச்சல பிரதேசம், குலு மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மணாலியில் அமைந்துள்ளது இடும்பியின் திருக்கோயில். இக்கோயில் இடும்பியின் சகோதரன் இடும்பனால் எழுப்பப்பட்ட மிகப் பழைமையான குகைக் கோயிலாகும். ஹிரிடிம்பி கோயில் அல்லது ஹிடிம்பா கோயில் என்று அழைக்கப்படும் பாரம்பரிய மிக்க இக்கோயில் தூங்க்ரி எனப்படும் கேதுருக் காடுகளால் சூழப்பட்ட கோயிலாக இயற்கையுடன் இணைந்து காணப்படுகிறது. ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது இக்கோயில். ஹிடிம்பா தூங்க்ரியில் தியானம் செய்ததால் இந்த கோயில் தூங்கிரி தேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் மணாலி நகரத்திலிருந்து நடந்த செல்லக்கூடிய தொலைவில் உள்ளது. கி.பி.1553ம் ஆண்டு ராஜா பகதூர் சிங்கால் கட்டப்பட்ட ஹிடிம்பா தேவி கோயில் மணாலியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். ஹிடிம்பா கோயில் தடிமனான தேவதாரு மரங்களால் வடிவமைக்கப்பட்ட பக்கோடா வடிவ கூரையைக் கொண்டுள்ளது. இக்கோயில் 24 மீட்டர் உயரம் மற்றும் மர ஓடுகள் கொண்ட மூன்று சதுர கூரைகளை உள்ளடக்கியது. நான்காவது பித்தளை பந்து மூடிய கூம்பு வடிவ கூரையால் கட்டப்பட்டுள்ள வட்ட மரக் குகைக்கு மேலே சிறிய அளவிலான அடுக்குகளில் உள்ளது.கோயிலின் வெளிப்புற மரமும் ஜன்னல்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் மூன்று பக்கங்களிலும் வராண்டாக்கள் உள்ளன.
கோயில் வாசல் கிழக்கு நோக்கி உள்ளது. மரத்தாலான கதவு வெவ்வேறு தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் யானை, புலி, பறவைகள் போன்ற உயிர்களை சித்தரிக்கும் மர வேலைப்பாடுகளால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது . ஹிடிம்பா கோயில் குலு பள்ளத்தாக்கு முழுவதுமின்றி, அதற்கு அப்பால் கூட வழிபாட்டுக்குரியதாக உள்ளது.
கோயிலின் உட்புறம் பரந்த பாறையால் மூடப்பட்டிருப்பதால், தரை தளத்தைத் தவிர வேறு எந்த அறையும் இங்கு இல்லை. இக்கோயிலில் ராஜா பகதூர் சிங்கின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் (ஜூலை / ஆகஸ்ட்) நடைபெறும் திருவிழா பிரசித்தமானது. தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஹிடிம்பா தேவியின் பிறந்த நாளான மே 14 அன்று கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவும் இங்கு மிகவும் விசேஷம்.
உள்ளூர் மக்களால் கொண்டாடப்படும் இவ்விழாவில் எப்போதாவது விலங்குகளை பலியிடுவதும் உண்டு. முக்கியமாக, நோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை தணிக்கும் நடவடிக்கையாக இந்த விழாக்கள் நடைபெறுகின்றன. ஹிடிம்பா காக்கும் தெய்வமாக இப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறாள். தற்போது இந்தக் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.