கண் நோயை தீர்க்கும் முருகன் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

Enkan murugan temple
Enkan murugan templeImage Credits: Maalaimalar

சிக்கல், எட்டுக்குடி ஆகிய இடங்களில் உள்ள உயிரோட்டமிக்க முருகன் சிலையை செதுக்கிய சிற்பியே எண்கண் திருத்தலத்தில் அருளும் முருகன் சிலையையும் செதுக்கினார். இத்தலத்தில் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திர தினத்தன்று வந்து முருகனுக்கு அர்ச்சனை செய்தால், கண் பிரச்னை விரைவில் குணமாகும். இந்தக் கோயில் கண் நோய் தீர்க்கும் மகத்துவம் பெற்றது. இந்த சிலையை வடித்த சிற்பி கண் பார்வையும், கட்டை விரலும் இன்றியே இந்தச் சிலையை வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருச்சிலையை வடித்த சிற்பியின் ஜீவசமாதியும் இந்தக் கோயிலிலேயே அமைந்துள்ளது. 1975லும், 2004லும் அந்த ஜீவசமாதியின் அருகில் உள்ள மரம் சாய்ந்தது. ஆனால், திரும்பவும் துளிர்விட்டு முளைக்கத் தொடங்கியது என்பது இங்குள்ள மக்களால் அதிசயமாகப் பேசப்படுகிறது.

இக்கோயில் முருகன் சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டது. முருகன் ஆறு முகங்களையும், 12 திருக்கரங்களையும் கொண்டிருக்கிறார். முத்தரசசோழன் என்ற மகாராஜாவிற்கு ஆறு முகத்தோடும், 12 கைகளோடும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது. அவர் சிற்பி ஒருவரை அழைத்து தனது ஆசையை கூற, அவருமே உயிரோட்டமுள்ள இந்த முருகன் சிலையை வடித்துக் கொடுத்தார். இதை பார்த்த அரசன், ‘இதைப் போன்ற சிலையை  நீ வேறு எங்கும் செய்யக்கூடாது’ என்று கூறி சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார்.

அந்த சிற்பி அதன் பிறகு எட்டுக்குடிக்கு வருகிறார். அங்கேயும் ஒரு முருகன் சிலையை வடிக்கிறார். இதை அறிந்த அரசன், சிற்பியின் கண்ணையும் எடுத்து விடுகிறார். கண்ணும், கட்டை விரலும் இல்லாதபோது அசரீரி  வாக்கு கேட்கிறது. ‘அஷ்டநேத்திரபுரத்துக்குப் போய் ஒரு முருகன் சிலை செய். உனக்கு கண்ணும், கட்டை விரலும் கிடைக்கும்’ என்றது அந்த அசரீரி.

சிற்பிக்கு கண்ணில்லாததால் அஷ்டநேத்திரபுரத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க, முருகப்பெருமானே 5 வயது பெண் குழந்தையாக மாறி அவருக்கு வழி காட்டுகிறார். பிறகு முருகன் சிலை செய்து கண் திறக்கும் வேளையில், ‘எனக்கே கண் இல்லை. நான் எப்படி உனக்குக் கண்ணை திறப்பேன்’ என்று சிற்பி கேட்கிறார். பிறகு தனது எண்ணத்தின் மூலமாகவே முருகப்பெருமானின் கண்ணை திறக்கிறார். அப்போது உளி முருகப்பெருமானின் கட்டை விரலில் பட்டு இரத்தம் பீறிட்டு வர சிற்பிக்கு கண்ணும், கட்டைவிரலும் கிடைக்கிறது. ‘எனக்குக் கண் கொடுத்த முருகா!’ என்று சிற்பி கூறியதே எண்கண் முருகனாக இந்த ஊருக்குப் பெயர் வந்தது.

இதையும் படியுங்கள்:
சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா?
Enkan murugan temple

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட க்ஷேத்ரம். திருப்புகழில் முருகப்பெருமானை ஐந்து வயது குழந்தையாக குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். மற்ற கோயில்களில் முருகன் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியிருப்பார். இங்கே முருகன் தெற்கு நோக்கியிருக்கிறார். செவ்வாய் தோஷம் நிவர்த்தி, குழந்தைப்பேறு, திருமணத்தடை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விளக்குப்போட்டு அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் அவர்களது கோரிக்கை நிறைவேறும். இந்த முருகப்பெருமானை வடித்த சிற்பியின் ஜீவசமாதி இங்கேயுள்ள வன்னிமரத்தின் கீழ் அமையப்பட்டிருக்கிறது.

வேண்டியவர்களுக்கு வேண்டிய வரத்தை தந்து அருள்பாலிக்கும் இக்கோயில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எண்கண் கிராமத்தில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலை ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டுச் செல்வது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com