கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

Navabhashana Navagraha temple
Navabhashana Navagraha templeImage Credits: Tripadvisor

தென்தமிழகத்தில் உள்ள கடல் சூழ்ந்த பட்டினம்தான் தேவிப்பட்டினமாகும். இங்கேதான் கடலுக்கு நடுவிலே எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் அமைந்துள்ளது நவபாஷாண நவக்கிரக ஆலயம். திரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்ரீராமரால் ஒன்பது பிடி மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண சிலைகளை நாம் இப்போதும் தொட்டு வணங்க முடியும் என்பது எத்தகைய ஆச்சர்யமான விஷயமாக உள்ளது?

இத்தனை ஆண்டுகள் தண்ணீரிலேயே இருந்தும் அந்த நவக்கிரகங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் எப்போதெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதை அழிப்பதற்கு அன்னை சக்தி அவதாரம் எடுத்து அநீதியை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார். அத்தகைய தேவியின் பெயரால் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் தேவிப்பட்டினம் என்று பெயர் மருவியது. இவ்விடத்தில் ஸ்ரீராமர் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்த காரணத்தை இந்தப் பதிவில் காணலாம்.

பித்ரு தோஷம் முதல் பலவித தோஷங்களை நிவர்த்தி செய்யும் தேவிப்பட்டினம் ராமநாதபுரத்திலிருந்து வடக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஒரு சமயம் மகிஷாசுரன் என்னும் அசுரன் பிரம்மதேவனை நோக்கி தவம் புரிந்தான். பிரம்மனும் அவனது தவத்தில் மனம் குளிர்ந்து வேண்டிய வரத்தை கேட்கச் சொன்னார். அதற்கு மகிஷாசுரனோ, தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். ‘சாகாவரம் உலகில் பிறந்த எந்த உயிரினத்திற்கும் கிடையாது. வேறு ஏதாவது வரம் கேள்’ என்று கூறினார் பிரம்மன். அதற்கு மகிஷாசுரனோ, ‘ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு நிகழ வேண்டும்’ என்று வரம் வேண்டினான். பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு அவன் வரம் கேட்டான்.

அதைத் தொடர்ந்து தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரையும் துன்பப்படுத்தினான். இதனால் அனைவரும் சிவனிடம் உதவி கேட்டனர். மகிஷாசுரனை ஒரு பெண்ணாலேயே அழிக்க முடியும் என்பதால் சக்தி தேவிக்கு சிவன் தனது சூலத்தையும், மகாவிஷ்ணு தனது சக்கரத்தையும், பிரம்மன் தனது கமண்டலத்தையும், இந்திரன் தனது வஜ்ராயுதத்தையும், வாயு பகவான் தம்முடைய வில்லையும், ஐராவதம் தனது மணியையும், எமன் தம்முடைய தண்டத்தையும், காலன் கத்தியையும், சமுத்திரம் தாமரையையும், சூரியன் தமது வெண்மை கதிர்களையும்  கொடுத்தனர்.

பராசக்தி தன்னை அழிக்க வருவதையறிந்த மகிஷாசுரன் தேவிபுரத்தில் அமைந்திருந்த சக்கர தீர்த்தம் சென்று அதில் ஒளிந்துகொள்கிறான். தனது சக்தியால் அவனை வெளியிலே கொண்டு வந்து அழித்து மகிஷாசுரமர்த்தினி என்ற பெயரும் அன்னை சக்தி பெற்றாள்.

மகிஷாசுரனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தினியாக சாந்தம் பெற்று சுயம்பு வடிவத்தில் இங்கே அன்னை சக்தி தேவி அருள்பாலிக்கிறார்.

சீதா தேவியை அசுரன் ராவணன் கடத்திச் சென்றதால், சீதா தேவியை மீட்க ராமன் தென்திசையை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் விநாயகரையும், நவக்கிரகங்களையும் வழிபடுவது மிகவும் முக்கியம். அதனால் முதலில் உப்புப் படிமங்கள் இருந்த இடத்தில் விநாயகரை வழிபட்டிருக்கிறார்கள். அந்த இடமே ராமநாதபுரத்தில் உள்ள உப்பூர் விநாயகர் கோயில் ஆகும். தேவிபுரத்தில் தங்கி தனது கைகளாலேயே கடலுக்கு நடுவே நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இந்த நவக்கிரகங்களுக்கு நவபாஷாண சக்தியிருப்பதாகக் கருதப்படுவதால் இவை நவபாஷாண நவக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தேன் உறிஞ்சும் விநாயகர் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்!
Navabhashana Navagraha temple

இங்கு ஸ்ரீராமனின் சனி தோஷம் நீங்கியதாகவும், ராவணனுடனான போரில் வென்றதாகவும் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள நவக்கிரகங்களை பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பூஜை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் உள்ள கடல் தீர்த்தத்தில் நீராடி நவக்கிரகத்தை வழிபட்டு நவதானியம் சமர்ப்பித்து 9 முறை வலம் வந்து அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை நீங்கும். நவக்கிரக தோஷங்கள், பித்ரு சாபங்கள், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்க சிறந்த பரிகாரத் தலமாக தேவிப்பட்டினம் விளங்குகிறது. தை, ஆடி, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் இத்தலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் சென்றுவிட்டு இங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com